பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 4 வீரர்கள், 4 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
காஷ்மீரின் உரி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள், ஒரு ராணுவ வீரர், வீரமரணம் அடைந்தனர். பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் 8 வீரர்கள் உயிரிழந்தனர். சுமார் 12 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் ஏராளமான பதுங்கு குழிகளும், ஆயுத, எரிபொருள் கிடங்குகளும் அழிக்கப்பட்டன.
இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துவது வழக்கம். இதன்மூலம் இந்திய ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பி தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்து வருகிறது.
கடந்த சில வாரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம். உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹாஜி பீர், ராகேஷ் தோவல் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். பொதுமக்களில் சிலரும் உயிரிழந்தனர்.
இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவ தரப்புக்கு மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
உரி மட்டுமன்றி பண்டிப்போரா மாவட்டம், குப்வாரா மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். நடப்பு நவம்பர் மாதத்தில் மட்டும் 128 முறை பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறியுள்ளது.
இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.