மத்திய அரசில், ராஜஸ்தானை சேர்ந்த அர்ஜுன் ராம் மேக்வால் மந்திரியாக பதவி வகிக்கிறார். இவர் நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கனரக தொழில் துறை இணை மந்திரியாக பணியாற்றி வருகிறார். இவரது வீடியோ ஒன்று பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் தத்தி தாவிக் கொண்டிருக்கிறது.
ராஜஸ்தான் மண்ணின் மைந்தனுக்கே உரிய தலைப்பாகை, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம், தோளில் துண்டு, வெள்ளை ஜிப்பாவுடன் கம்பீரமாக தோன்றும் மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் கையில் அழகான அப்பள பாக்கெட்டை வைத்திருக்கிறார். அந்த அப்பள பாக்கெட்டை தூக்கிப் பிடித்து, அதன் அருமை பெருமைகளை இந்தியில் விவரிக்கிறார்.

அதாவது, அந்த அப்பளம் சுயசார்பு இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்டதாம். அது மட்டுமல்ல, அப்பளத்தில் ஆன்டிபாடிஸ் (எதிர்ப்பு சக்தி) நிறைந்திருக்கிறதாம். அப்பளத்தை நறுக், மொறுக் என்று கடித்து சாப்பிட்டால், கொரோனா வைரஸ், துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடிவிடுவாம்.
சுருங்க கூறுவதென்றால், அப்பளத்தை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா வைரஸை ஒரு கை பார்த்துவிடும் என்று மந்திரி உறுதியாக கூறுகிறார். அப்பளத்தின் பெயர் பாபிஜி பப்பட். தமிழில், அண்ணி அப்பளம் என்று பொருள்.
கொரோனா வைரஸுக்கு அப்பள மருந்தை பரிந்துரைத்த மத்திய மந்திரியை, நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.