நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலையில் தொடங்குவது வழக்கம்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த கூட்டத்தொடர் தள்ளிப்போனது. இதைத் தொடர்ந்து வரும் 14-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 14-ம் தேதி மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை லோக் சபா செயல்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை ராஜ்ஜிய சபா நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் 15-ம் தேதி முதல் தினமும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை லோக் சபா செயல்படும். இதேபோல வரும் 15-ம் தேதி முதல் காலை 9 மணி முதல் 1 மணி வரை ராஜ்ஜிய சபா நடைபெற உள்ளது.

கேள்வி நேரம் ரத்து

இரு அவைகளிலும் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனிநபர் மசோதா தாக்கல் செய்யவும் அனுமதி இல்லை.

லோக் சபாவும், ராஜ்ஜிய சபாவும் விடுமுறையின்றி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என்று இரு அவைகளின் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி எம்.பி.க்கள், இரு அவைகளின் ஊழியர்கள், செய்தியாளர்கள் என சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற வளாக நுழைவுவாயிலில் எம்.பி.க்களை தொடாமலேயே பாதுகாப்பு பரிசோதனை நடத்தப்பட உள்ளது. மேலும் அவர்களின் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் அதிருப்தி

கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தில், “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்புவதற்கு கேள்வி நேரம் அவசியம். அதனை ரத்து செய்யக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறும்போது, “கரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி ஜனநாயகத்தை கொலை செய்கிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம் குறித்தும், கரோனா வைரஸ் பரவல் குறித்தும் எதிர்க்கட்சிகளால் கேள்வி கேட்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கரோனாவை காரணம் காட்டி ஜனநாயகத்தையும் மக்களின் எதிர்ப்பையும் நசுக்குவார்கள் என்று 4 மாதங்களுக்கு முன்பே நான் கூறினேன்.

கரோனாவில் இருந்து பாதுகாப்பதாக கூறி கேள்வி நேரத்தை ரத்து செய்வது எந்த வகையில் நியாயம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *