கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேச அளவில் கணினி விற்பனை 11.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
கடந்த டிசம்பரில் சீனாவின் பயணத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்து பரவியுள்ளது. உலகம் முழுவதும் ஒரு கோடியே 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் லாக் டவுன் அமல் செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க அரசு, தனியார் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக சர்வதேச அளவில் கணினி விற்பனை 11.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த 4 மாதங்களில் 7 கோடியே 23 லட்சம் கணினிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் கணினிகளின் விற்பனை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த எச்.பி. நிறுவனம் ஒரு கோடியே 80 லட்சம் கணினிகளை விற்றுள்ளது. சீனாவை சேர்ந்த லெனோவா 1.74 கோடி, அமெரிக்காவை சேர்ந்த டெல், 1.20 கோடி, அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் 55 லட்சம், தைவானை சேர்ந்த அசர் 48 லட்சம் மற்றும் இதர நிறுவனங்கள் 1.43 கோடி கணினிகளை விற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த 4 மாதங்களில் 7.23 லட்சம் கணினிகள் சர்வதேச சந்தையில் விற்பனையாகி உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. எனவே நடப்பு ஜூலைக்கு பிறகு கணினி விற்பனை குறையும் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.