கொரோனா.. பிசிஆர் பரிசோதனை கட்டாயம்… என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்ய பிசிஆர் (பாலிமெரேசே சைன் ரியாக்சன்) பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வைரஸ் தொற்றுள்ளதா என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த பரிசோதனையின் முடிவை அறிய சுமார் 48 மணி நேரம் வரை ஆகிறது.
நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று ஒரு லட்சத்தை நெருங்கி வருவதால் ‘ஆன்டிபாடி’ எனப்படும் விரைவு பரிசோதனையும் அதிகமாக நடத்தப்படுகிறது. இது ரத்தத்தை அடிப்படையாகக் கொண்ட சோதனையாகும்.

ரத்தத்தில் உள்ள செல்களை நீக்கிய பிறகு ‘சீரம்’ எனும் திரவம் கிடைக்கும். அதில் எதிர்ப்பு அணுக்கள் (ஆன்டிபாடிகள்) இருக்கிறதா என்று சோதித்து அறியப்படும்.
அதாவது யாருக்காவது நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்களது ரத்தத்தில் ‘ஆன்டிபாடிகள்’ உருவாகி இருக்கும். இதன்மூலம் அந்த நபர் நோய் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதை கண்டறியலாம்.
இந்த பரிசோதனையில் 30 நிமிடங்களில் முடிவை அறிந்து கொள்ள முடியும். எனினும் பிசிஆர் பரிசோதனை நடத்திய பிறகே கொரோனோ வைரஸ் தொற்றை உறுதி செய்ய முடியும்.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆன்டிபாடி பரிசோதனையில், கிருமி தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று முடிவு வந்தாலும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக பிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும்.
ஆன்டிபாடி பரிசோதனை முடிவின்போது அறிகுறிகள் இல்லாமல் இருந்து, 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்களுக்கும் கட்டாயம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் நகல் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.