ஐ.நா.வின் உலக உணவு திட்டத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஐ.நா. சபையின் உலக உணவு திட்டத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 

இதில் அமைதிக்கான நோபல் பரிசை மட்டும் நார்வே நோபல் கமிட்டி அறிவிக்கிறது. இதர 5 பிரிவுகளுக்கான நோபல் பரிசை சுவீடன் அமைப்புகள் அறிவிக்கின்றன.

211 தனிநபர்கள், 107 நிறுவனங்கள்

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேடா டென்பர்க், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா உட்பட 211 தனிநபர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் உட்பட 107 நிறுவனங்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. 

நார்வே நோபல் கமிட்டி தலைவர் பெய்ரிட் ரெய்ஸ் ஆண்டர்சன் தலைமையிலான 5 பேர் குழு, பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்களை பரிசீலனை செய்தது.

பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு ஐ.நா. சபையின் உலக உணவு திட்டம் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. 

பசியை போக்கும் அமைப்பு

இதுகுறித்து நார்வே நோபல் கமிட்டி தலைவர் பெய்ரிட் ரெய்ஸ் ஆண்டர்சன், ஆஸ்லோவில் நேற்று கூறியதாவது:

பசி, பட்டினியை போக்க ஒழிக்க போராடும் ஐ.நா. சபையின் உலக உணவு திட்டம், 2020-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் 88 நாடுகளில் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்டோரின் பசியை இந்த அமைப்பு போக்கி வருகிறது. 

போர் மற்றும் ஆயுத போராட்டங்களால் பல்வேறு நாடுகளில் பசி, பட்டினி அதிகரித்து வருகிறது. 

உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸால் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

உள்நாட்டு குழப்பம் காரணமாக ஏமன், காங்கோ, நைஜீரியா, தெற்கு சூடான், புர்கினா பாஸோ உள்ளிட்ட நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பசி, பட்டினியால் வாடுகின்றனர்.  

உணவே, சிறந்த மருந்து

கரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதைய நிலையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறந்த மருந்து உணவு மட்டுமே. 

பசியும் ஆயுத போராட்டமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. போர், ஆயுத போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை பசி, பட்டினி பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கரோனாவில் மனித குலம் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்துள்ளது. கரோனாவுக்கு முன்பு சுமார் 13.5 கோடி மக்கள் பசியால் தவித்து வந்தனர். 

கரோனாவால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் மேலும் 13 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். 

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏழைகளின் பசியை ஆற்றும் மகத்தான பணியை ஐ.நா.வின் உலக உணவு திட்டம் செய்து வருகிறது. 

அந்த அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

இதன்மூலம் பசியால் வாடும் கோடிக்கணக்கான மக்களின் பக்கம் உலகின் பார்வை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்ப அதிர்ச்சி

கடந்த 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.நா.வின் உலக உணவு திட்டம் இத்தாலியின் ரோம் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  

உலக உணவு திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் பெஸ்லி கூறும்போது, “அமைதிக்கான நோபல் பரிசு எங்களுக்கு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. போர், உள்நாட்டு ஆயுத போராட்டம் உள்ளிட்ட கடினமான சூழ்நிலைகளில் எங்கள் அமைப்பின் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

சுமார் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாள்தோறும் சுமார் 10 கோடி பேரின் பசியை ஆற்றி வருகிறோம். எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நோபல் பரிசை சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐ.நா. சபையின் உலக சுகாதார அமைப்பின் பெயரும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் சீனாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது இதர நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு உரிய எச்சரிக்கை விடுக்கவில்லை. 

சீனாவுக்கு சாதகமாக உண்மைகளை மூடிமறைத்தது என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன்காரணமாக அந்த அமைப்பின் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *