காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதனால் போலீஸ் டீம் உஷாரானது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு நள்ளிரவில் சென்றனர்.
வெடிகுண்டு மிரட்டல்
அங்கு விவரத்தைக் கூறி வீடு முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து போலீசார் நிம்மதியடைந்தனர். இதையடுத்து வெடிகுண்டு போன் அழைப்பு புரளி எனத் தெரிந்ததாலும் அதை விடுத்தவர் யாரென்று போலீசார் விசாரித்தனர். சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த அழைப்பு விழுப்புரத்திலிருந்து வந்ததை சிக்னல் மூலம் போலீசார் கண்டறிந்தனர்.
உடனடியாக இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிக்னல் அடிப்படையில் விசாரித்த போலீசார், மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வர் என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்தது. அதனால் அவரின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நடிகர் ரஜினி
கடந்த சில தினங்களுக்க முன் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு கடலூரைச் சேர்ந்த சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தான். அவனிடம் விசாரித்தபோது மனநலம் பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்தது. இதையடுத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிறுவனின் வீட்டுக்கு ச் சென்று விசாரித்தனர். அப்போது அவரின் குடும்பம் வறுமையில் வாடுவதைத் தெரிந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரண பொருள்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் வீட்டுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் கூறுகையில், “நடிகர் விஜய், தற்போது சாலிகிராம் வீட்டில் குடியிருக்கவில்லை. கிழக்கு கடற்கரைச் சாலையில் குடியிருந்துவருகிறார். சாலிகிராம் வீட்டில் ஒரு பகுதியில் நடிகர் விஜய் ஆண்டனி குடியிருந்து வருகிறார்.
மனநல பாதிப்பு
இன்னொரு பகுதியில் விஜய்யின் தந்தை சந்திரசேகரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில்தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக நள்ளிரவில் தகவல் வந்தது.
மிரட்டல் விடுத்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்தவரை சில மணி நேரத்திலேயே கண்டுபிடித்துவிட்டோம்” என்றனர்.
நடிகர் விஜய்யின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பதிவு செய்துவருகின்றனர்.