ராமர் கோயிலுக்கு ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு கற்கள் வெட்டி எடுக்கப்பட உள்ளன.
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.
முதல் மாடியில் 160 தூண்கள், 2-வது மாடியில் 132 தூண்கள், 3-வது மாடியில் 72 தூண்கள் அமைக்கப்பட உள்ளன.
ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு தேவையான கற்கள் கடந்த 1989-ம் ஆண்டில் இருந்தே சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் மாவட்டம், வம்சி பகாட்பூரில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து ஏற்கெனவே இளஞ்சிவப்பு நிற மணற்கற்கள், அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த இளஞ்சிவப்பு நிற மணற்கற்கள் ஆயிரம் ஆண்டுகள் வரை சிதையாமல் பலமுடன் இருக்கும் தன்மை கொண்டவை. செங்கோட்டை, நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவை இந்த வகை கற்களால் கட்டப்பட்டவை.
வம்சி பகாட்பூர் வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து இளஞ்சிவப்பு நிற மணற்கற்களை வெட்டி எடுக்க கடந்த 2016-ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பரில் 30 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட மணற்கற்களை ராஜஸ்தான் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தடை காரணமாக ராமர் கோயில் கட்டுமானத்துக்காக ராஜஸ்தானில் இருந்து கற்களை வெட்டி எடுப்பதில் தடங்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து விசுவ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா கூறும்போது, “அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு 3.5 லட்சம் முதல் 4 லட்சம் கியூபிக் அடி மணற்கற்கள் தேவைப்படுகிறது.
இதில் 1.1 லட்சம் கியூபிக் அடி இளஞ்சிவப்பு மணற்கற்களை ராஜஸ்தானில் இருந்து ஏற்கெனவே கொண்டு வந்துவிட்டோம். மீதமுள்ள கற்களையும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். தரைத்தளத்துக்கு தேவையான கற்களில் 45 சதவீத கற்களை செதுக்கிவிட்டோம்” என்று தெரிவித்தார்.
இந்த பின்னணியில் வம்சி பகாட்பூர் வனவிலங்குகள் சரணாலயத்தில் இளஞ்சிவப்பு மணற்கற்களை வெட்டியெடுக்க அனுமதி கோரி மத்திய சுரங்கத் துறையிடம் விண்ணப்பிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில சுரங்கத் துறை இணைச் செயலாளர் ஓ.பி.கேசரா, சுரங்கத் துறை இயக்குநருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், வம்சி பகாட்பூர் வனவிலங்குகள் சரணாலத்தில் நில வகைப்பாட்டை மாற்றி, கற்களை வெட்டி எடுக்க மத்திய சுரங்கத் துறையிடம் விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த விண்ணப்பத்தை முன்னுரிமை அடிப்படையில் சமர்ப்பிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பாரத்பூர் மாவட்ட ஆட்சியர் நாத்மால் கூறும்போது, “ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு மணற்கற்களுக்கு நாடு முழுவதும் பெரும் கிராக்கி உள்ளது. மணற்கற்களை வெட்டியெடுப்பது தொடர்பாக இதுவரை எங்களுக்கு எழுத்துபூர்வமாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
பாரத்பூர் சுரங்கத் துறை தலைமை பொறியாளர் பி.எஸ். மீனா கூறும்போது, “வனவிலங்குகள் சரணாலயத்தின் நிலை வகைப்பாட்டை மாற்ற விண்ணப்பம் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
கற்களை வெட்டி எடுப்பது தொடர்பாக வனத்துறையுடன் இணைந்து 556 ஹெக்டேர் பரப்பளவை ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
குஜராத்தின் சோம்புரா குடும்பத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா தலைமையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. அவரது மகன் ஆசிஷ் சோம்புரா கூறும்போது, “வம்சி பாரத்பூரில் கிடைக்கும் இளஞ்சிவப்பு மணற்கற்கள் மிகவும் சிறப்பு மிக்கவை.
கற்கள் உலகின் மன்னாதி மன்னனாக இந்த கற்கள் அழைக்கப்படுகின்றன. ஒருவேளை ராஜஸ்தான் மணற்கற்கள் கிடைக்கவில்லை என்றால் வேறு கற்களுக்கு மாற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்” என்றார்.
ராஜஸ்தானில் தற்போது முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. ஆரம்ப காலத்தில் ராமர் கோயிலுக்காக வம்சி பாரத்பூரில் இருந்து கற்களை வெட்டி எடுக்க அந்த மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது மாநில அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி கற்களை வெட்டி எடுக்க மத்திய சுரங்கத் துறையிடம் விண்ணப்பிக்க முடிவு செய்திருக்கிறது.