கொரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி – முதல்வர் அறிவிப்பு

டெல்லி, கேரளா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா என்றால் என்ன?

பிளாஸ்மா என்பது மனித ரத்தத்தில் உள்ள ஒரு திரவமாகும். ஒவ்வொரு மனித உடலில் உள்ள ரத்தத்தில் 45 சதவீகிதம் சிவப்பு மற்றும் வெள்ளை தட்டையணுக்கள் உள்ளன. மீதமுள்ள 55 சதவீகிதம் பிளாஸ்மா இருக்கும்.

ஒரு வைரஸ் மனித உடலுக்குள் நுழையும் போது அதை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிக்ஸ் (நோய் எதிர்ப்பு திறன்) பிளாஸ்மாவில்தான் தோன்றுகின்றன. இதன் காரணமாகத்தான் பிளாஸ்மா மூலம் நோயாளிகளை குணப்படுத்த முடியும் என மருத்துவத்துறை நம்புகிறது.

பிளாஸ்மா தானம்

ஒருவரது உடலில் இருந்து ரத்தம் எடுப்பதுபோல் பிளாஸ்மா எடுப்பதற்கென தனி இயந்திரங்கள் உள்ளன. ரத்த தானம் செய்வது போல பிளாஸ்மா தானமும் செய்யலாம். அதற்கு சில பரிசோதனைகள் உள்ளன. அதன்பிறகே பிளாஸ்மா தானம் செய்ய முடியும். முதலில் ரத்தம் எடுக்கப்பட்டு அதில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படும்.

டெல்லி, கேரளா, குஜராத், பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்த தொடங்கி உள்ளன. இதன்மூலம் பல நோயாளிகள் சுகமடைந்துவருகின்றனர்.

முதல்வர் உத்தரவு

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸிக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்ததால் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை விரைவில் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

14-வது நாளில் தானம்

சென்னை ஸ்டான்லி, ஓமந்தூரார், திருச்சி, சேலம், கோவை அரசு மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா தானம் பெறப்படும் என்றும் பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14வது நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம். சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்ய இயலாது.

தகுதியானவர்கள் தயக்கமும், பயமுமின்றி தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்யலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *