பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் ரத்து

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பழைய நடைமுறையே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


மேல்நிலைக் கல்வியில் புதிய பாடத்திட்ட முறையினை அறிமுகப்படுத்தி தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து புதிய பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு இன்று அரிவித்தது.


இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து, புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில், 2020 – 21 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.


மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும்போது, அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் சுருங்க நேரிடும் என்பதால் 4 பாடத் தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கப்பட்டது.


பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும், பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினையும் ஏற்று முந்தைய அரசாணையை ரத்து செய்வதுடன், நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும், அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்த உத்தரவிடப்படுகிறது” என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *