‘பி.எம்.கேர்ஸ்’ நிதியை, பேரிடர் நிதிக்கு மாற்ற தேவையில்லை… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

பி.எம். கேர்ஸ் நிதியை, தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்ற தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்ட கடந்த மார்ச் 28-ம் தேதி ‘பி.எம். கேர்ஸ் நிதி ‘ உருவாக்கப்பட்டது.

தனிநபர்கள், நிறுவனங்கள் ‘பி.எம். கேர்ஸ்’ நிதிக்கு தாராளமாக நன்கொடைகளை வழங்கி வருகின்றன.
இதற்கிடையில் சிஎப்ஐஎல் என்ற தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவை தாக்கல் செய்தது. அதில், சட்ட விதிகளுக்கு புறம்பாக ‘பிஎம் கேர்ஸ்’ நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் பெறப்பட்ட நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டும். கரோனா வைரஸை எதிர்கொள்ள புதிதாக தேசிய பேரிடர் திட்டத்தை வரையறுக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, அசோக் பூஷண், எம்.ஆர். ஷா அமர்வு விசாரித்தது.

சுப்ரீம் கோர்ட் வளாகம்
சுப்ரீம் கோர்ட் வளாகம்

தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார்.அவர் வாதிடும்போது, ‘பி.எம். கேர்ஸ்’ நிதியை தலைமை தணிக்கை அதிகாரி (சிஏஜி) தணிக்கை செய்யவில்லை. தனியார் ஆடிட்டர் தணிக்கை செய்கிறார்.

எனவே ‘பி.எம். கேர்ஸ்’ நிதியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த, அந்த நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும் என்று வாதிட்டார்.

தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, “ஆர்டிஐ வரம்பின் கீழ் பி.எம் கேர்ஸ் நிதி வரவில்லை.

இந்த நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டும். கொரோனா வைரஸை எதிர்கொள்ள புதிதாக தேசிய பேரிடர் திட்டத்தை வரையறுக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் வாதிடும்போது, “பிஎம் கேர்ஸ் நிதி ஓர் அறக்கட்டளையாகும்.

இதற்கு யார் வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம். ‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதி, மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை.

‘பி.எம்.கேர்ஸ்’ நிதியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும் உறுப்பினர்களாக மூத்த அமைச்சர்களும் உள்ளனர். கொரோனா வைரஸை எதிர்கொள்ள மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறது.

நோய்த் தொற்றால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள கடந்த 2019-ம் ஆண்டே தேசிய அளவிலான திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

புதிதாக தேசிய திட்டம் தேவையில்லை” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர்.”தேசிய பேரிடர் நிவாரண நிதி, பி.எம். கேர்ஸ் நிதி இரண்டும் வெவ்வேறானவை, வெவ்வேறு நோக்கங்களுக்காக தொடங்கப்பட்டவை.

தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தின்பேரில் தேசிய பேரிடர் நிவாரண நிதி, பி.எம். கேர்ஸ் நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். இரண்டுக்கும் நிதி வழங்க எவ்வித நிர்பந்தமும் இல்லை. தடையும் இல்லை.

எனவே பி.எம். கேர்ஸ் நிதியை, தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. கரோனா வைரஸை எதிர்கொள்ள தற்போதைய திட்டமே போதுமானது. புதிய திட்டம் தேவையில்லை” என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *