ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வரிசையில் புதிதாக ஒவ்வொரு இந்தியருக்கும் புதிதாக ஹெல்த் டிஜிட்டல் கார்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
74-வது சுதந்திர தின விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் 7-வது முறையாக தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது புதிய அதிரடி அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டார்.
“தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் என்ற மிகப்பெரிய சுகாதார இயக்கம் இன்று தொடங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இந்தியர்கள் அனைவருக்கும் தனித்தனி சுகாதார அட்டைகள் வழங்கப்படும். இத்திட்டம் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.

இனிமேல் மருத்துவ காகித அறிக்கைகளை சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவரின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் ஒரே டிஜிட்டல் கார்டில் சேமித்து வைக்கப்படும்.
அவர் எங்கு சிகிச்சைக்கு சென்றாலும் அவரது உடல் நிலை, மருத்துவ சிகிச்சை தொடர்பான அனைத்து விவரங்களையும் அந்த டிஜிட்டல் கார்டின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
டெலிமெடிசின், ஆன்லைனில் மருந்துகளை வாங்குவது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் இணைக்கப்படும்.
இந்த புதிய திட்டத்துக்காக ரூ.470 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.