மனித குலத்துக்காக கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்போம்… பிரதமர் மோடி உறுதி

மனித குலத்துக்காக கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்போம்… என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி பூண்டுள்ளார்.

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 12-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஜூலை 21-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மாநாடு தள்ளிவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 12-வது பிரிக்ஸ் மாநாடு காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் பிரேசில் அதிபர்  ஜேர் போல்சோனரோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோஸா ஆகியோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

“ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதேபோல உலக சுகாதார அமைப்பு, சர்வதேச செலாவணி நிதியம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றிலும் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.

கரோனா வைரஸுக்கு தேவையான மருந்துகளை சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது. இந்திய மருந்து நிறுவனங்களின் உற்பத்தித் திறனை உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன. மனித குலத்தின் நன்மைக்காக கொரோனா தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து வழங்கும்.

கொரோனா வைரஸ் காலகட்டத்தில் ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம். இதன்மூலம் சர்வதேச சந்தைக்கு தேவையான பொருட்களை இந்தியா உற்பத்தி செய்து விநியோகிக்கும்.  பிரிக்ஸ் நாடுகளின் தனியார் நிறுவனங்கள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *