குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும்.. பிரதமர் நரேந்திர மோடி உறுதி…

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

பிஹாரில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 45,945 கிராமங்களுக்கு ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைய வசதி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கிவைத்தார்.

மேலும் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 9 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது வேளாண் மசோதாக்கள் குறித்து பிரதமர் விரிவான விளக்கம் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட் வேளாண் மசோதாக்கள் வரலாற்று சிறப்புமிக்கவை. இந்த மசோதாக்கள் மூலம் பல்வேறு கட்டுகளில் இருந்து விவசாயிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இனிமேல் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.

அதுவும் விவசாயிகள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்க முடியும். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும். ஒவ்வொரு சீசனின்போதும் வழக்கம்போல குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படும்.

விவசாயிகளின் நலன் கருதி அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதாவில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உருளை கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இவற்றை விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

வேளாண் விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யாது என்ற சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவற்றை நம்ப வேண்டாம். விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளைபொருட்களை மத்திய அரசு வழக்கம்போல கொள்முதல் செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *