மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி பிரதமர் மோடியின் உரை இன்று காலை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
கார்கில் போரில் பாகிஸ்தானை வென்ற 21-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றி தினத்தை மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடிநினைவு கூர்ந்தார்.
பாகிஸ்தான் நமது முதுகில் குத்த முயற்சிக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நமது வீரர்கள் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனர்.

கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் வீர வணக்கம் செலுத்துகிறேன். போரில் வெற்றிவாகை சூடிய இந்திய வீரர்களுக்கு சமூக வலைதளங்களில் மரியாதை செலுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.உலக நாடுகளை ஒப்பிடும்போது கரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருகிறது.
அதேநேரம் வைரஸ் அச்சுறுத்தல் இன்னமும் தொடர்கிறது.
தென்மேற்கு பருவமழையால் வடஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.மழைக்காலத்தில் வைரஸ் வேகமாகப் பரவும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சிலர் முகக்கவசம் அணிய கஷ்டப்படுகின்றனர். ஒரு விஷயத்தை யோசித்து பாருங்கள்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் மணிக்கணக்கில் பாதுகாப்பு கவச உடையை அணிகின்றனர். அவர்களின் சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது.எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 6 அடி இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.