வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள்

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

‘மனதின் குரல்’ (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பப்பட்டது. வானொலி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

“வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த வேளாண் சீர்திருத்தங்களுக்கு அண்மையில் சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது.

இதன்மூலம் விவசாயிகள் விடுதலை அடைந்துள்ளனர். அவர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. புதிய வாய்ப்புக்கான கதவுகள் திறந்துள்ளன. 

மகாராஷ்டிராவின் துலே பகுதியை சேர்ந்த விவசாயி ஜிதேந்திர போயிஜி வேளாண் சட்டங்களை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஜிதேந்திர போயிஜி தனது வயலில் மக்கா சோளத்தை பயிரிட்டார். விளைபொருளை  நல்ல விலைக்கு வியாபாரியிடம் பேரம் பேசினார். இறுதியில் ரூ.3.32 லட்சத்துக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.

இதில் ரூ.25,000-ஐ முன்பணமாக ஜிதேந்திர போயிஜி பெற்றுக் கொண்டார். 15 நாட்களில் மீதித் தொகையை வழங்க வியாபாரி உறுதி அளித்தார். ஆனால் குறித்த காலத்தில் பணம் வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக விவசாயி ஜிதேந்திர போயிஜி புகார் அளித்து சில நாட்களிலேயே மீதி பணத்தை பெற்றார்.  புதிய வேளாண் சட்டங்களால் இது சாத்தியமானது. 

ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முகமது அஸ்லம், வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் விவசாயிகளை ஒன்றிணைத்துள்ளார்.

இதன்மூலம் வேளாண் விளைபொருட்களின் விலை நிலவரம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரே விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களையும் வாங்குகிறார்.

 ஹரியாணாவின் கைத்தல் பகுதியை சேர்ந்த வீரேந்திர யாதவ், வேளாண் கழிவுகளை பணம் கொழிக்கும் தொழிலாக மாற்றியுள்ளார்.

இயந்திரத்தின் உதவியுடன் வேளாண் கழிவுகளை உருளைகளாக மாற்றி, காகித ஆலைகளுக்கு விற்று வருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் அவர் ரூ.50 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார். 

கொரோனா தொற்று பிரச்சினை உருவாகி ஓராண்டாகிறது. இந்த ஓராண்டில் ஒட்டு மொத்த உலக நாடுகளும் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகின்றன. நாம் ஊரடங்கில் இருந்து வெளியேறிவிட்டோம்.

அடுத்த கட்டமாக தடுப்பூசி குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். நமது கவனக்குறைவு, தவறுகள் பேராபத்தை ஏற்படுத்தக்கூடும். வைரஸுக்கு எதிராக உறுதியாகப் போரிட வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *