3 விஷயங்களை நிறுத்த கூடாதய்யா… தமிழக இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

இளைஞர்களின் புதுமை திறன்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ என்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் அரசுத் துறையின் பல்வேறு பிரச்சினைகள், சவால்கள் இளைஞர்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு இளைஞர்கள் தீர்வு சொல்கின்றனர்.


இந்த ஆண்டு போட்டியில் நாடு முழுவதும் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு ஏராளமான இளைஞர்கள் தீர்வுகளை கூறினர்.
இதில் சிறந்த தீர்வுகளை வழங்கியோர் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான இறுதி சுற்றுப் போட்டி வரும் 3-ம் வரை நடைபெறுகிறது. இதில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.1 லட்சம், 2-ம் இடம் பெறுவோருக்கு ரூ.75,000, மூன்றாம் இடம் பெறுவோருக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்பட உள்ளது.”ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020″ போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர்கள்.
கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர்கள்.


தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இன்ஜீனியரிங் அண்ட் டெக்லானஜி, ஹைதராபாத்தை சேர்ந்த எம்எல்ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜெய்ப்பூரை சேர்ந்த ஜேஇசிஆர்சி பல்கலைக்கழகம், டேராடூனை சேர்ந்த கிராபிக் இரா பல்கலைக்கழகம், சண்டிகர் இன்ஜீனியரிங் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
“அன்றாட வாழ்வில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தேசிய அளவில், “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020” போட்டி நடத்தப்பட்டு வருகிறது.உலகளாவிய அளவில் சிறந்த விஞ்ஞானியாக, சிறந்த தொழில்நுட்ப நிபுணராக, தொழிலதிபராக இந்தியர்கள் உருவெடுக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம்.


அதற்கு இந்தியாவின் கல்வி உயர்தரமானதாக இருக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டு அறிவின் நூற்றாண்டாகும். இந்த நூற்றாண்டில் ஆராய்ச்சி, புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு தேசிய கல்வி கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் புன்னகை பூத்த பிரதமர் நரேந்திர மோடி.
கலந்துரையாடலில் புன்னகை பூத்த பிரதமர் நரேந்திர மோடி.


வாழ்க்கையில் 3 விஷயங்களை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. படிப்பது, கேள்வி கேட்பது, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகிய 3 விஷயங்களுக்கும் முடிவே இருக்கக் கூடாது. நீங்கள் படிக்கும்போது கேள்வி கேட்பதற்கான ஞானம் பிறக்கும். அந்த ஞானத்தின் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.


உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப நாமும் மாற வேண்டும். புதிய தேசிய கல்வி கொள்கையில் புத்தக பையின் சுமை குறைக்கப்பட்டிருக்கிறது. மனப்பாட கல்வி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.


பெரும்பாலான வெளிநாடுகளில் தாய்மொழியிலேயே கல்வி போதிக்கப்படுகிறது. புதிய கல்வி கொள்கையில் ஆரம்ப பள்ளிகளில் தாய் மொழிக்கு முதலிடம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய மொழிகளின் வரலாற்றையும் செழுமையையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.


மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே புதிய தேசிய கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய இளைஞர்கள் வேலை தேடுவோராக இல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாறுவார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *