பிஹார் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார்.. பிரதமர் மோடி உறுதி

பிஹார் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார்.. பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.பிஹாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

கடந்த 2005 முதல் 2014 வரையும், கடந்த 2015 பிப்ரவரி முதல் இப்போது வரையும்  ஐக்கிய ஜனதா தள  தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகப் பதவி வகிக்கிறார். 

இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் மூத்த தலைவர் ஜிதன்ராம் மாஞ்சி முதல்வராகப் பதவி வகித்தார்.

பிஹார் சட்டப்பேரவையின் காலம் வரும் நவம்பரில் நிறைவடைவதால், அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜன சக்தி  கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக பிரச்சினை வெடித்துள்ளது.

லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வான், நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். நிதிஷ் குமாரை கடுமையாக விமர்ச்தித்து வருகிறார்.

இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நிதிஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார் என்பதை அவர் மறைமுகமாக உறுதி செய்துள்ளார்.

ரூ.900 கோடி திட்டங்கள்

பிஹாரில்  ரூ.900 கோடி மதிப்பில் நிறைவேற்பட்டுள்ள பெட்ரோலிய குழாய் திட்டம், மற்றும் 2 சமையல் காஸ் சிலிண்டர் ஆலைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைத்து பேசினார்.

“நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள பிஹாரில் பெட்ரோலியம், எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவியது.

இந்த குறையைப் போக்கும் வகையில், ரூ.21,000 கோடி மதிப்பில் 10 பெரிய பெட்ரோலிய திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.தற்போது வரை 7 திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

பரதமர் உர்ஜா கங்கா யோஜ்னா திட்டத்தில், பிஹார் உள்ளிட்ட 7 மாநிலங்களை இணைத்து 3,000 கி.மீ. தொலைவுக்கு பெட்ரோலிய குழாய் பதிக்கப்படுகிறது. தற்போது பிரதீப்-ஹால்டா இடையே குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

இது தலைநகர் பாட்னா, முஷாபர்பூர் வரை நீட்டிக்கப்படும். இந்த திட்டம் நிறைவடையும்போது உலகிலேயே மிகப்பெரிய குழாய் திட்டம் என்ற பெருமையைப் பெறும்.

பங்கா, சாம்பிரான் பகுதிகளில் புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டர் ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ஆலைகளில் இருந்து பிஹார் மட்டுமன்றி, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும்.  

நாடு முழுவதும் பெட்ரோலிய துறை சார்பாக 8,000-க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்களில் சுமார் ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமாக  முதலீடு செய்யப்படும்.

நாட்டின் திறன்சார் சக்திமையமாக பிஹார் உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் பிஹார் தொழிலாளர்களின் பங்களிப்பு உள்ளது.

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் கடந்த 15 ஆண்டுகளாக பிஹாரில் நல்லாட்சி நடைபெறுகிறது. மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அனைவரையும் சென்றடைந்துள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *