மீண்டும் முழு ஊரடங்கா? முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காட்டுத் தீயாக பரவி வருகிறது. சில நூறுகளில் இருந்த வைரஸ் தொற்று இப்போது 50 ஆயிரத்தை தொட்டு நிற்கிறது. இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமைடந்திருந்தாலும் புதிய வைரஸ் தொற்று அச்சுறுத்துகிறது. மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசத்தில் வைரஸ் தொற்று ராக்கெட் வேகத்தில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

மாநில முதல்வர்களுடன் முன்னர் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி


வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக தமிழகம், ஆந்திரா,தெலங்கானா, பிஹார், அசாம், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களின் முதல்வர்களுடன் சில நாட்களுக்கு முன்பு பிரதமர் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து வரும் 27-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா அல்லது வைரஸ் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு டெல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது


வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் முதல்முறையாக முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதன்பின் மே 31-ம் தேதி வரை 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஜூன் 1-ம் தேதி முதல் ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

கடந்த ஜூனில் – ‘அன்லாக் -1’, ஜூலையில் ‘அன்லாக் -2’ வழிகாட்டு நெறிகள் வெளியிடப்பட்டன.
வரும் ஆகஸ்ட் மாதம் ‘அன்லாக்-3’ அறிவிக்கப்படுமா அல்லது மீண்டும் லாக்டவுன் (ஊரடங்கு) அறிவிக்கப்படுமா என்பது முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *