உலகின் மிக நீளமான ‘அடல்’ சுரங்கப்பாதை…

உலகின் மிக நீளமான ‘அடல்’ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி அக். 3-ம் தேதி திறந்து வைக்கிறார்.

இமாச்சல பிரதேசத்தின் மணாலி, லாஹாவ்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் வகையில் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்க கடந்த 2010 -ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

பத்தாண்டு காலத்தில் சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையாகும்.

இந்த சுரங்கப் பாதைக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக ‘அடல்’ என்று பெயரிடப்பட்டிருக்கிது.

இதன் தெற்கு முனை மணாலியில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் வடக்கு முனை லாஹாவ் பள்ளத்தாக்கின் சிஸ்ஸு பகுதி, டெலிங் கிராமம் அருகேயும் அமைந்துள்ளன.

கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள ‘அடல்’ சுரங்கப்பாதை மூலம் இமாச்சல பிரதேசத்தின் மணாலி, லடாக்கின் லே நகருக்கு இடையேயான பயண நேரம் குறையும்.

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப் பாதை.
இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப் பாதை.

குளிர் காலத்தில் லாஹாவ்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதிகளில் சுமார் 6 மாதங்கள் வரை போக்குவரத்து தடைபடும். ‘அடல்’ சுரங்கப்பாதை மூலம் இனிமேல் ஆண்டு முழுவதும் எவ்வித தடையும் இன்றி போக்குவரத்து நடைபெறும்.

இமாச்சல பிரதேசம், லடாக் பகுதிகள் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. இமாச்சல பிரதேசத்துக்கும் லடாக்குக்கும் இடையே ராணுவ போக்குவரத்து அதிகம் நடைபெறுகிறது.

எனவே ‘அடல்’ சுரங்கப்பாதை ராணுவரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த பாதையில் தினமும் 3,000 கார்கள், 1,500 லாரிகள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

‘அடல்’ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 3-ம் தேதி நேரில் திறந்து வைக்கிறார். இமாச்சல பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குரும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

“அடல் சுரங்கப்பாதையை திறந்துவைக்க வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். சுரங்கப் பாதையை திறந்து வைத்தபிறகு 2 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்.

கரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும்” என்று இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்குர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *