சீனாவுடன் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி லடாக் எல்லையில் இன்று காலை திடீர் ஆய்வு செய்தார்.
கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக கடந்த மே 5,6-ம் தேதிகளில் இருதரப்பு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
கல்வான் பள்ளத்தாக்கு
இதன்பின் கடந்த ஜூன் 15-ம் தேதி கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான இந்திய ராணுவ வீரர்கள் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்து பணி மேற்கொண்டபோது அங்கு சீன வீரர்கள் முகாமிட்டிருப்பது தெரியவந்தது. அங்கிருந்து வெளியேறுமாறு சீன வீரர்களுக்கு கர்னல் சந்தோஷ் பாபு அறிவுறுத்தினார்.
அப்போது எதிர்பாராதவகையில் இந்திய வீரர்கள் மீது சீன வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். எல்லை ரோந்து பணியின்போது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று இருநாடுகளிடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதை மதித்து இருதரப்பினர் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை.
எனினும் இந்திய, சீன வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது.
20 இந்திய வீரர்கள் பலி
இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தை சேர்ந்த வீரர் பழனி உட்பட 20 பேர் பலியாகினர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியானது. இதை அமெரிக்க உளவுத் துறையும் உறுதி செய்தது. ஆனால் சீன அரசு தொடர்ந்து உண்மையை மறைத்து வருகிறது.
வீர மரணமடைந்த 20 இந்திய வீரர்களின் உடல்களும் அவரவர் சொந்த ஊர்களில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. ஆனால் சீன வீரர்களுக்கு அந்த நாட்டு அரசு எவ்வித மரியாதையும் அளிக்கவில்லை. இது சீன ராணுவ வட்டாரத்திலேயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் திடீர் பயணம்
இதனிடையே இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் எல்லையில் பதற்றத்தை தணித்து படைகளை வாபஸ் பெற பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் சீன ராணுவம் எல்லைப் பகுதியில் தொடர்ந்து வீரர்களை குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் எல்லையில் வீரர்களையும் ஆயுதங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென இன்று காலை லடாக் எல்லைப் பகுதிக்கு சென்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் லே விமானப்படைத் தளத்துக்கு சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிமு பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்கு சென்றார்.
அங்கு முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ வடக்கு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஜோஷி, லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் 14-வது படைப்பிரிவு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினார். எல்லையில் வீரர்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக லடாக் எல்லைப்பகுதிக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நமது வீரர்களிடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. தாய்நாட்டை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளோம். எல்லையில் யார் அத்துமீறினாலும் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று தெரிவித்தன.