சென்னையில் சேலைக்குள் மறைத்து துணிகளைத் திருடிய பெண் கைது

 சென்னையில் கூட்டமாக இருந்த ஜவுளிகடைக்குள் நுழைந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண், சேலைக்குள் மறைத்து துணிகளைத் திருடியுள்ளார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

 தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மக்கள் கூட்டம்அலைமோதுகின்றன. கொரோனாவை பலர் மறந்து சமூக விலகல், மாஸ்க் அணியாமல் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். இந்தநிலையில் வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையிலுள்ள மொத்த விலைக் கடையான  ஐவுளிக்கடையில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

அதனால் வாடிக்கையாளர்களை சிசிடிவி மூலம் கடை ஊழியர்கள் கண்காணித்துக்கொண்டிருந்தனர். கடைக்கு வெளியில் சிசிடிவி மூலம் உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர் தலைமையில் போலீஸார் கண்காணித்தனர். மேலும் வண்ணாரப்பேட்டை பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 

 இந்தநிலையில் மொத்த விலைக் கடையில் சேலை அணிந்த பெண் ஒருவர், ஊழியர்கள் பார்க்காத நேரத்தில் துணிகளை எடுத்து மறைத்தார். அதை சிசிடிவி மூலம் கவனித்த ஊழியர்கள் உடனடியாக பெண் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துணிகளைத் திருடிய பெண், கால்களுக்கு நடுவில் அதை வைத்துக் கொண்டு அங்கிருந்து மெதுவாக நடந்து வெளியில் சென்றுக் கொண்டிருந்தார். 

 உடனடியாக அந்தப் பெண்ணை மடக்கிப்பிடித்த பெண் ஊழியர்கள், அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்தப் பெண், 6 டி சர்ட்கள், 3 ஷார்ட்ஸ்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் மஜித், தலைமைக் காவலர் பரிமளா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் நிர்மலா (49) என்றும், ஆந்திர மாநிலம் சத்தியவேடு, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. நிர்மலா, ரூ.2,550 மதிப்புள்ள துணிகளை சேலைக்குள் மறைத்து திருடியது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார் நிர்மலாவை புழல் சிறையில் அடைத்தனர். 

 ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்த நிர்மலா, இதற்கு முன் தி.நகரில் உள்ள பிரபலமான கடையில் இதே ஸ்டைலில் துணிகளைத் திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே தீபாவளி பர்சஸிக்காக செல்லும் பொதுமக்கள் தீபாவளி திருடர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கின்றனர் சென்னைப் போலீஸார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *