பெண் டாக்டருக்கு தெரியாமல் லோன்;காட்டிக் கொடுத்த செல்போன் அழைப்பு – போலீஸ் பிடியில் பிரபல கிளினிக்கின் ஓனர்

சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டருக்குத் தெரியாமல் அவரின் பெயரில் லட்சக்கணக்கில் லோன் வாங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மருத்துவமனை ஓனரிடம் திருமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் டாக்டர்

சென்னையில் உள்ள பிரபல மெடிக்கல் சென்டரில் (கிளினிக்கில்) பெண் டாக்டர் ஒருவர் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் அவரின் செல்போன் நம்பருக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய தனியார் வங்கி ஊழியர் ஒருவர், மேடம், நீங்கள் வாங்கிய லோனுக்கான இஎம்ஐ, சில மாதங்களாக செலுத்தவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதைக்கேட்டு அந்தப் பெண் டாக்டர் அதிர்ச்சியடைந்தார். சார், நான் எந்த லோன் வாங்கவில்லை என்று கூறியதோடு பந்தாவாக போன் நம்பரை சரி பாருங்க என்று பெண் டாக்டர் தெரிவித்தார். உடனே இணைப்பைத் துண்டித்த வங்கி ஊழியர், சில நிமிடங்களுக்குப்பிறகு மீண்டும் பெண் டாக்டருக்கு போன் செய்துள்ளார்.

அப்போது, வங்கி ஊழியர், பெண் டாக்டரின் பெயர், முகவரி, செல்போன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒவ்வொன்றாகக் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் டாக்டர், நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் நான் லோன் வாங்கவே இல்லையே என்று மறுபடியும் கூறியிருக்கிறார்.

லோன்

உடனே வங்கி ஊழியர், உங்கள் பெயரில்தான் லோன் கொடுத்திருக்கிறோம். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் வங்கி கிளையிலிருந்துதான் பணத்தை எடுத்திருக்கிறீர்கள் என்று விவரத்துடன் கூறியுள்ளார். அதைக்கேட்ட பிறகு ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று பெண் டாக்டர் உணர்ந்துக் கொண்டார்.

பின்னர் வங்கி ஊழியரிடம் சில தகவல்களைக் கேட்டறிந்த பெண் டாக்டர், சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்குச் சென்று விவரத்தைக் கூறியுள்ளார். அப்போது அவர்கள் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து பெண் டாக்டர், கடந்த அக்டோபர் மாதம் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் திருமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கில் அண்ணாநகர் சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை திருமங்கலம் போலீஸார் நாடினர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங், இந்த வழக்கில் சைபர் க்ரைம் தொடர்பான தகவல்களை சேகரித்தார்.

போலி ஆவணங்கள்

சம்பந்தப்பட்ட வங்கி தரப்பிலிருந்து லோனுக்கு சமர்பிக்கப்பட்ட ஆவணங்களை பெற்றார். அப்போது பெண் டாக்டரின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதோடு அவரின் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றை போலியாக தயாரித்து வங்கியில் சமர்பிக்கப்பட்டது தெரியவந்தது.

அதை சமர்பித்தவர் யாரென்று சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்தனர். அப்போது பெண் டாக்டர் வேலைப்பார்க்கும் கிளினிக்கின் ஓனர் என்ற தகவல் தெரிந்தது.

அவரைப் பிடித்த போலீஸார் விசாரித்தபோது அவர், போலி ஆவணங்களைச் சமர்பித்து லோன் வாங்கியதை ஒப்புக் கொண்டார்.

பெண் டாக்டருக்கு தெரியாமல் அவரின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கில் லோன் பெறப்பட்டிருந்தது.

கொரோனா காலம் தொடங்குவதற்கு முன்பு வரை மருத்துவமனையின் ஓனர், சரியாக கடனை செலுத்தி வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக அவரால் பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை.

அதனால்தான் வங்கியிலிருந்து மருத்துவமனையின் ஓனர் கொடுத்திருந்த அவரின் செல்போன் நம்பருக்கு போன் செய்யப்பட்டுள்ளது.

செல்போன்

அப்போது அவரின் போன் இணைப்பு கிடைக்காததால் பெண் டாக்டரின் செல்போன் நம்பருக்கு போன் அழைப்பு வந்துள்ளது. அதன்பிறகே பெண் டாக்டருக்கு விவரம் தெரிந்துள்ளது.

போலீஸ் விசாரணையின்போது மருத்துவமனையின் ஓனர், எனக்கு காலஅவகாசம் கொடுத்தால் லோன் தொகையை செலுத்திவிடுகிறேன் என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

மருத்துவமனை நடத்திவருபவர், வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர். அவரின் தந்தையும் பிரபல டாக்டர்.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அந்த டாக்டர், தன்னுடைய மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டரின் பெயரில் கடன் வாங்கிய சம்பவம் டாக்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *