சென்னையில் பத்து ரூபாய் நோட்டில் போடப்பட்டிருந்த கையெழுத்தால் திருட்டு வழக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கில் வருமானமின்றி தவித்த ஆட்டோ டிரைவர், மனைவியுடன் சேர்ந்து திருடி சிறையில் அடைக்கபட்டிருக்கிறார்.
பத்து ரூபாய் நோட்டால் திருட்டு வழக்கில் துப்பு துலங்கிய ருசிகர தகவல்களை இந்தச் செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்.
அம்மா மரணம்
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் சிவசங்கர் நகர், தண்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் துரை. வீட்டு உபயோகப் பொருள்களை தவணை முறையில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவரின் அம்மா கடந்த மே மாதம் 9-ம் தேதி இறந்து விட்டார். அதனால் துரையும் அவரின் அக்காள் மகனும் சுபாஷும் விழுப்புரத்துக்குச் சென்றனர்.
அப்போது வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவியைக் கொடுக்கும் பிரோமா வீட்டுக்குச் சென்றார் துரை. அங்கு பிரேமா இல்லை.
அதனால் துரையின் வீட்டின் அருகே குடியிருக்கும் நந்தினியிடம் இந்தச் சாவியை பிரோமாவிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.
இதையடுத்து அம்மாவின் இறுதி சடங்கு, காரியத்தை முடித்து விட்டு ஒரு மாதத்துக்குப்பிறகு துரை வீடு திரும்பினார். அம்மாவை இழந்த சோகத்திலிருந்த துரைக்கு இன்னொரு அதிர்ச்சி வீட்டில் காத்திருந்தது.

திருட்டு
அவர் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 3 சவரன் தங்க நகைகள், கொலுசு, 84000 ரூபாய் ஆகியவை திருட்டு போயிருந்தது. அதனால் வீட்டின் சாவியைக் கொடுத்த பிரோமாவிடம் விவரத்தைக் கூறினார். அதற்கு அவர், நான் வீட்டின் கதவை திறக்கவே இல்லை என்று பதிலளித்தார்.
அதன்பிறகு நந்தினியிடம் நகை, பணம் திருட்டு குறித்து கேட்டார். அதற்கு அவரும் நான் கதவைத் திறக்கவில்லை. என்னிடம் 2 மணி நேரம் மட்டுமே சாவி இருந்தது என்று தெரிவித்தார்.
இதையடுத்து துரை, சங்கர் நகர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
இந்தச் சமயத்தில் திருட்டுப் போன பணத்தில் ஒரு பத்து ரூபாய் நோட்டில் 4500 என்று எழுதி தன்னுடைய கையெழுத்தை போட்டிருப்பதாக துரை போலீஸாரிடம் கூறினார்.

பணம், நகை திருட்டு குறித்து தன்னுடைய நண்பர்களிடமும் துரை கூறியிருந்தார். பொழிச்சலூர் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடந்து வருகிறது.
அங்கு மதுபாட்டில்களை வாங்க துரையின் நண்பர் ஒருவர் சென்றிருக்கிறார்.
அவர் மது வாங்கி விட்டு மீதி தொகையை வாங்கியிருக்கிறார். அதில் ஒரு பத்து ரூபாய் நோட்டில் துரையின் கையெழுத்து, 4500 என எழுதப்பட்டிருந்தது. அதைப்பார்த்த அவர், துரைக்கு தகவல் தெரிவித்தார்.
பத்து ரூபாய் நோட்டு
உடனடியாக பத்து ரூபாயை வாங்கிப் பார்த்த துரை, அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விவரத்தைக் கூறினார்.
அதனால் உஷாரான போலீஸாரும் கள்ளச்சந்தையில் மது விற்பனை குறித்து விசாரித்ததோடு அன்றைய தினம் யார், யார் மது வாங்கினார்கள் என்ற விவரத்தை கேட்டறிந்தனர்.
அதில் நந்தினியின் கணவர் உமாசங்கரும் ஒருவர் எனத் தெரியவந்தது.
ஏற்கெனவே போலீஸாரின் சந்தேகப்பார்வையிலிருந்த நந்தினி, அவரின் கணவர் உமாசங்கரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது இருவரும் தங்களின் பிள்ளைகள் சத்தியமாக நாங்கள் திருடவில்லை என்று கூறினர்.
அதன்பிறகு போலீஸார் உமா சங்கர், கள்ளச்சந்தையில் மதுபானம் வாங்க கொடுத்த ரூபாய் நோட்டு விவரங்களைக் கூறியதோடு அதில் ஒரு பத்து ரூபாயில் துரையின் கையெழுத்து இருந்த விவரத்தையும் தெரிவித்தனர். அதன்பிறகு நந்தினியும் உமாசங்கரும் பணம் நகை ஆகியவற்றைத் திருடியதை ஒப்புக் கொண்டனர்.

ஆட்டோ டிரைவராக வேலைப்பார்த்த உமாசங்கருக்கு கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லை. அதனால் ஆட்டோவில் காய்கறிகளை விற்று வந்திருக்கிறார். அதிலும் போதிய வருமானம் கிடைக்கவில்லை.
இந்தச் சமயத்தில்தான் அம்மாவின் இறப்புக்காக துரை வீட்டைப் பூட்டி சாவியை நந்தினியிடம் கொடுத்திருக்கிறார். பிசினஸ் செய்து வரும் துரையிடம் எப்போதும் பணம் இருக்கும்.
அதனால் துரையின் வீட்டின் கதவைத் திறந்த நந்தினியும் உமாசங்கரும் நகை, பணத்தைத் திருடியிருக்கின்றனர்.
84,000 ரூபாய் பணத்தில் 50,000 ரூபாய் வரை செலவு செய்திருக்கின்றனர். திருடிய நகை, வெள்ளி கொலுசை வீட்டில் வைத்தால் சிக்கிக் கொள்வோம் எனக்கருதிய இருவரும் அதை உறவினர் வீட்டில் மறைத்து வைத்திருக்கின்றனர். அங்கிருந்து நகைகளை போலீஸார் மீட்டிருக்கின்றனர்.