முகநூல் காதலனை நம்பி வந்த 2 குழந்தைகளின் தாய் – சென்னையில் காத்திருந்த அதிர்ச்சி

முகநூல் காதலனை நம்பி கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு வந்த இரண்டு குழந்தைளின் தாயிடமிருந்து நகை, பணத்தைப் பறித்ததோடு அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற குற்றத்துக்காக மத்திய அரசு ஊழியரின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்தவர் கல்பனா (38). இவர், தஞ்சாவூரில் உள்ள வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவில் பணியாற்றி வந்தார். இவருக்கும் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கல்பனா, அவரைப்பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்தச் சமயத்தில் முகநூல் மூலம் சென்னை ஆவடி அண்ணாநகரைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் (35) என்பவர் கல்பனாவுக்கு அறிமுகமானார். இருவரும் முகநூல் மூலம் பழகினர். பின்னர் இருவரும் காதலித்தனர். இதையடுத்து தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு கல்பனா வந்தார்.

கடந்த 16.1.2021-ல் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் கல்பனாவை பிரசன்ன வெங்கடேஷ் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இருவரும் ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர். அப்போது, பிரசன்ன வெங்டேஷ், தன்னுடைய அம்மா விஜயா (51), அப்பா ரங்கசாமி (66), தங்கை புவனேஸ்வரி (30) ஆகியோரை கல்பனாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் அனைவரும் ஒரே வீட்டில் குடியிருந்தனர். இந்தச் சமயத்தில் 30.1.2021-ல் கல்பனாவை பிரசன்ன வெங்கடேஷ் ஆபாசமாக புகைப்படத்தை எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்போவதாக கூறியிருக்கிறார். அதற்கு மறுத்தால் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவு செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கல்பனா, பிரசன்ன வெங்கடேஷிடம் தகராறில் ஈடுபட்டார். அதனால் ஆத்திரமடைந்த பிரசன்ன வெங்கடேஷ் குடும்பத்தினர் கல்பனாவை அறையில் அடைத்து வைத்தனர். மேலும் கல்பனாவிடமிருந்த 5 சவரன் தங்க நகைகள், 3 லட்சம் ரூபாயையும் பிரசன்ன குடும்பத்தினர் பறித்து கொண்டனர்.

இந்தச் சமயத்தில் பிரசன்ன வெங்கடேஷ் குடும்பத்தினரிடமிருந்து தப்பிய கல்பனா, ஆவடி காவல் நிலையத்துக்கு ஜனவரி மாதம் வந்தார். அங்கு தனக்கு நடந்த கொடுமைகளை புகாராக எழுதிக் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு பிரசன்ன வெங்கடேஷ், அவரின் அப்பா ரங்கசாமி, அம்மா விஜயா, தங்கை புவனேஸ்வரி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட. பிரசன்ன வெங்கடேஷ், விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவரின் அப்பா ரங்கசாமி ஆவடியில் செயல்படும் ஹெச்.வி.எஃப்-பில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர். பிரசன்ன வெங்கடேஷிக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது. அவரும் மனைவியைப் பிரிந்து வசித்து வந்த நிலையில்தான் கல்பனாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பிரசன்ன வெங்கடேஷிடம் விசாரித்தபோது முக்கிய தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தன. அதன்அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

முகநூல் மூலம் பழகிய பெண்ணை திருமணம் செய்து அவரைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கணவர், அவரின் குடும்பத்தினர் முயற்சி செய்த குற்றச்சாட்டு ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *