சென்னையில் ஃபேஸ்புக் நண்பருக்காக சொந்த வீட்டிலிருந்து 44 லட்சம் ரூபாயைத் திருடிய நாடகமாடிய தொழிலதிபரின் மனைவி மற்றும் அவரின் நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிசினஸ்மேன்
சென்னை பட்டினம்பாக்கம் பெரிய பள்ளி தெருவைச் சேர்ந்தவர் தமீம்அன்சாரி. இவர் ஏற்றுமதி பிசினஸ் செய்துவருகிறார். இவரின் மனைவி தஸ்னீம் (36). இந்தத் தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
பிசினஸ் காரணமாக தமீம்அன்சாரி, அடிக்கடி வெளியூர் செல்வார். அதனால் வீட்டிலிருந்த தஸ்னீம், சமூகவலைதளங்களில் அதிக நேரத்தை செலவழித்தார்.

இந்தநிலையில் தமீம்அன்சாரியின் 4 வயது மகனுக்கு நவம்பர் 20-ம் தேதி பிறந்தநாள். அதை சிறப்பாக கொண்டாடினர்.
விழா முடிந்த பிறகு தமீம்அன்சாரி, பீரோவில் வைத்திருந்த 44 லட்சம் ரூபாயை பார்த்தார்.
பிறந்தநாள் விழா
ஆனால், பணம் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தமீம்அன்சாரி, பணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரித்தனர். அப்போது யாரும் பணம் எடுக்கவில்லை என்று கூறினர்.
இந்தச் சமயத்தில் பிறந்தநாள் விழாவுக்கு வந்த உறவினர் ஒருவர், கறுப்பு நிற பேக்கை வீட்டிலிருந்து எடுத்துச் சென்றதாக தமீம்அன்சாரியின் மகன் தெரிவித்தான்.
அதனால் அவரிடம் குடும்பத்தினர் விசாரித்தபோது அவர் தான் பணம் எடுக்கவில்லை என்று கூறினார்.
இதையடுத்து பணம் திருட்டு தொடர்பாக பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் தமீம்அன்சாரி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நவாஸ், செல்வராணி மற்றம் போலீஸார் விசாரித்தனர்.
தமீம்அன்சாரியின் மகன் கூறிய தகவலின்படி உறவினர் ஒருவரிடம் போலீஸார் விசாரித்தனர். ஆனால், அவர் பணத்தை எடுக்கவில்லை என போலீஸாரிடமும் கூறினார். இதையடுத்து தமீம்அன்சாரியின் மகனிடம் போலீஸார் மீண்டும் விசாரித்தனர்.
இந்தத் தடவை தனது மாமா கறுப்பு நிற பேக்கை எடுத்துச் சென்றதைப் பார்த்ததாக அம்மா (தஸ்னீம்) கூறச் சொன்னதாக சொல்லிக் கொடுத்த கிளியைப் போல கூறினான்.
செல்போன் ஆய்வு
அதையடுத்து தஸ்னீமிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், சின்ன பையன் தெரியாமல் அப்படிச் சொல்கிறான் என்று போலீஸாரிடம் திருட வில்லை எனக் கூறினார்.
இருப்பினும் போலீஸார், தஸ்னீமின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது அடிக்கடி புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது (36) என்பவரிடம் பேசிய தகவல் தெரிந்தது. பிறந்தநாள் விழாவுக்கு முன்பும் ரியாஸ் அகமதுவை தஸ்னீம் சந்தித்த விவரம் தெரிந்தது.

அதனால் ரியாஸ் அகமதுவிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், உண்மையை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து ரியாஸ் அகமதுவிடம் இருந்து 44 லட்சம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர் அளித்த தகவலின்படி தஸ்னீம்மை போலீஸார் கைது செய்தனர்.
ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான ரியாஸ்அகமதுவுடன் தஸ்னீம் நெருங்கிப் பழகியுள்ளார். அப்போது, தமீம்அன்சாரி, வீட்டில் 44 லட்சம் ரூபாய் வைத்திருக்கும் தகவலை தஸ்னீம், ஃபேஸ்புக் நண்பர் ரியாஸ் அகமதுவிடம் தெரிவித்தார்.
அதன்பிறகே பணத்தைத் திருடிய தஸ்னீம், அதை ராயப்பேட்டையில் வைத்து ரியாஸ்அகமதுவிடம் கொடுத்தார். ஆனால் திருடவில்லை என்று நாடகமாடிய தஸ்னீம், தன் மகன் மூலம் உறவினர் ஒருவர் மீது பழிபோட திட்டமிட்டார்.
ஆனால் அந்த சதி திட்டம், செல்போன் மற்றும் சிறுவனின் வாக்குமூலத்தால் முறியடிக்கப்பட்டது.