பணத்துக்காக நண்பனை ஆள் வைத்து கடத்திய நண்பன் – 24 மணி நேரத்தில் கும்பலைப் பிடித்த உதவி கமிஷனர் டீம்

சென்னையில் பணத்துக்காக நண்பனை ஆள் வைத்து கடத்திய நண்பன் மற்றும் அவரின் கூட்டாளிகளை போலீஸ் உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையிலான போலீஸ் டீம் 24 மணி நேரத்தில் கைது செய்தது.

சென்னை புழல், புனித அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமதுரபீக் (28). இவர் ஷேர்மார்க்கெட் பிசினஸ் செய்துவருகிறார். வியாசர்பாடியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இருவரும் நண்பர்கள்.

கடந்த 27-ம் தேதி முகமது ரபீக்கிற்கு போன் செய்த விஜயகுமார், என்னுடைய வீட்டில் யாருமில்லை. ஒன்றாக சேர்ந்து மது அருந்தலாம் என்று கூறினார். அதனால் முகமது ரபீக் விஜயகுமார் வீட்டிற்கு வந்தார். பின்னர் இருவரும் மது அருந்தினர்.

போதையிலிருந்தபோது விஜயகுமார் வீட்டுக்குள் 8 பேர் வந்தனர். அவர்கள் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தினர். பின்னர் ஒரு புகார் தொடர்பாக முகமது ரபீக்கிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறி அவரை காரில் அழைத்துச் சென்றனர். பின்னர் காரில் வைத்தே முகமது ரபீக்கை தாக்கிய அந்தக் கும்பல், அவரைக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டினர். இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்தால் உயிரோடு விட்டுவிடுவோம் என்று கூறினர்.

உயிர் பயத்தில் கேட்ட பணத்தை கொடுப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து முகமது ரபீக்கின் ஏடிஎம் கார்டு மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அந்தக் கும்பலைச் சேர்ந்தவர் எடுத்தனர். பின்னர், முகமது ரபீக்கை 28-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் மாதவரம் ரவுண்டானா பகுதியில் இறக்கி விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

கடத்தி பணம் பறித்த கும்பல் குறித்து எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், மனோன்மணி மற்றும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.

செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பதுங்கியிருந்த இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முகமது ரபீக்கிடம் பணம் பறித்தது அவரின் உயிர்நண்பன் முகமது காசிம் என்பது தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் விஜயகுமாருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த போலீஸார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போதுதான் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் தெரிந்தது.

இதையடுத்து வியாசர்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் (27), பெரம்பூரைச் சேர்ந்த முகமது காசிம் (31), அம்பத்தூரைச் சேர்ந்த ராஜா (34), ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விக்ரம் (34), சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மோகன் (33), புதுப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ் (27), காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்கிற முனியா (29), ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1,62,000 ரூபாய், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைதான அம்பத்தூரைச் சேர்ந்த ராஜா, தனக்கு திருமணம் என்றும் அதற்கான அழைப்பிதழ்களைக் கொடுக்க வேண்டும் நண்பர் ஒருவரிடம் காரை வாங்கியிருக்கிறார்.

அந்தக் காரில்தான் முகமது ரபீக்கை கடத்தியிருக்கின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்ததால் அதன் உரிமையாளருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையிலான போலீஸ் டீம் துரிதமாக செயல்பட்டு கடத்தல் கும்பலைக் கைது செய்தததை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *