குடங்களில் கட்டுக்கட்டாக பணம் கொரோனா கொள்ளையன் கைது

சென்னை அயனாவரம், என் எம்.கே நகரைச் சேர்ந்தவர் முனீர்பாஷா (வயது 44) . இவர் புளியந்தோப்பு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் நலச் சங்க இணைச் செயலாளராக உள்ளார். இவரின் அலுவலகம் புளியந்தோப்பு பாடிசன்புரம் லேனில் உள்ளது. ஊரடங்கு காரணமாக ஆட்டு வியாபாரத்தில் கிடைத்த ரூ. 61 லட்சத்து 50 ஆயிரத்தை பீரோவில் வைத்திருந்துள்ளார். அலுவலக கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

சாலமன்

சிசிடிவி கேமரா


இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் முனீர்பாஷா புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரித்தார். அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 2 இளைஞர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்த போலீசார், பெரம்பூரைச் சேர்ந்த முகமது சபி (வயது 20) என்பவரின் வீட்டுக்குச் சென்றனர். அவரிடம் விசாரித்தபோது அவரின் நண்பர் சாலமனனுக்கும் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சாலமனின் வீடு அமைந்துள்ள பெரம்பூர் ஜமாலயா 6-வது தெருவுக்கு போலீசார் சென்றனர்.

முகமது ஷபி

குடங்களில் பணம்


இருவரிடமும் கொள்ளையடித்த பணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சாலமனின் வீட்டின் குடங்களில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ரூ.23 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அடுத்து முகமது சபி வீட்டிலும் அவரின் தந்தை நடத்தி வரும் பினாயில் கம்பெனியிலும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து மீதி பணத்தை போலீசார் மீட்டனர். மொத்தம் ரூ.61 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. கைதான இருவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கைது செய்த போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *