சிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன்

சென்னையில் சிறுமியை காதலிப்பதாகக் கூறிய இளைஞர், அவரை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்றபோது போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.

சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி, கடந்த 10.1.2021-ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் அம்மா, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமியைத் தேடிவந்தனர்.

இந்தநிலையில் சிறுமி குறித்து போலீஸாருக்கு முக்கிய தகவல் ஒன்று கிடைத்தது. அது என்னவென்றால் சிறுமியை புளியந்தோப்பைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அஜித்தை போலீஸார் தேடினர். அவரின் செல்போன் சிக்னல் மூலம் போலீஸார் அஜித் தங்கியிலிருந்த இடத்தை கண்டறிந்தனர். அதன்பிறகு அங்குச் சென்ற போலீஸார் அஜித்தையும் சிறுமியையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

காதல்

அஜித்திடம் போலீஸார் விசாரித்தபோது சிறுமிக்கும் அஜித்துக்கும் ஒரே பகுதி என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இருவரும் அடிக்கடி சந்திருக்கின்றனர். பின்னர் சிறுமியிடம் அஜித், காதலைச் சொல்லியிருக்கிறார்.

பின்னர் சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றிருக்கிறார். இதையடுத்து அஜித்தை கைது செய்த போலீஸார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் சிறுமியை பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். சிறுமிக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டது. கைதான அஜித்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் போலீஸார் அடைத்தனர்.

புளியந்தோப்பு பகுதியில் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறிய இளைஞர் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *