சென்னை பெசன்ட் நகரில் மதுபானங்களை விற்ற தம்பதியைப் பிடிக்கச் சென்ற போலீஸாருக்கு கம்பீரம் படத்தில் வரும் காட்சியைப் போல அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
தைப்பூசம்
சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரின் மனைவி உஷா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. ரத்தினம் மீது மதுவிலக்குப்பிரிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த ஆண்டு தைப்பூசத்தையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரத்தினம், வீட்டில் வைத்து மதுபானங்களை விற்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் ரத்தினம் வீட்டுக்குச் சென்றனர். அங்கிருந்து மதுபாட்டில்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், ரத்தினத்தை விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்தனர்.

தீக்குளிப்பு
அதற்கு அவரின் மனைவி உஷா எதிர்ப்பு தெரிவித்தார். கணவர் ரத்தினத்தைக் கைது செய்யக்கூடாது என்று கூறிய உஷா திடீரென தன்மீது மண்ணெண்ணெய்யை ஊற்றினார். பின்னர் கணவரை கைது செய்தால் தீக்குளித்து விடுவேன் என்று மிரட்டினார். உஷாவின் உடலில் தீ பிடித்ததும் அவர் வலியால் கதறி துடித்தார். உடனடியாக போலீஸார் மற்றும் அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உஷாவைக் காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உஷாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முற்றுகைப் போராட்டம்
இதையடுத்து ரத்தினத்தைக் கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உஷா, போலீஸார் அவமானப்படுத்தியதால் தீக்குளித்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து உஷாவின் உறவினர்கள் அடையாறு காவல் மாவட்ட துணை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, முற்றுகையிட்டவர்களை சமரசப்படுத்தினர்.
இதற்கிடையில் தற்கொலைக்கு முயன்ற உஷாவின் மீதும் சாஸ்திரி நகர் போலீஸார் வழக்கு பதிந்திருக்கின்றனர். மேலும் உஷாவின் வீட்டின் அருகில் உள்ளவர்கள் அளித்த வீடியோ பேட்டி ஒன்றும் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. அதில், உஷாவும் ரத்தினமும் நீண்ட ஆண்டுகளாக கள்ளச் சந்தையில் மதுபானங்களை விற்று வருகின்றனர். அதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவருகிறது.
கம்பீரம்

உஷா, ரத்தினம் தம்பதியினர் மதுபானங்களை விற்பது குறித்து காவல் நிலையத்துக்கு இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே தகவல் தெரிவித்து வருகின்றனர். போலீஸார் ரத்தினம், உஷா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வீட்டுக்கு வரும்போதெல்லாம் உஷா, அநாகரீகமாக நடந்துக் கொள்வார். நேற்று நடந்த சம்பவத்தில்கூட போலீஸார் மீது எந்தவித தவறும் இல்லை என்று கூறுகின்றனர்.
கம்பீரம் படத்தில் நடிகர் வடிவேல் தலைமையில் போலீஸார் பெண் ஒருவரைப் பிடிக்கச் செல்வார்கள். அப்போது வீட்டுக்குள் செல்லும் அந்தப் பெண், ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி ஜன்னல் வழியாக வெளியில் வீசுவார். பின்னர் அந்தப் பெண் இப்போ வந்து முடிந்தால் என்னைப்பிடித்து பாரு என்று வெளியிலிருக்கும் போலீசாருக்கு சவால் விடுவார். நடிகர் வடிவேல் மீடியாக்களையும் அழைத்துச் சென்றிருப்பார். பின்னர் தைரியமாக வடிவேல் மட்டும் வீட்டுக்குள் நுழைவார்.
நடிகர் வடிவேல்
அடுத்த சில நிமிடங்களில் நடிகர் வடிவேலின் காவல் சீருடையை அந்தப் பெண் அணிந்துக் கொண்டு பின்பக்க வழியாக ஓடிச் செல்வதைப் போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதன்பிறகு போலீஸாரும் கேமராமேன்களும் வீட்டுக்குள் நுழைந்து பார்க்கும் போது நடிகர் வடிவேல் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் மறைந்திருப்பார். அதைப்போலத்தான் கணவரைக் கைது செய்ய போலீஸார் வந்தால் உஷாவும் ஆடைகளை அவிழ்த்து விட்டு தெருவுக்கு ஒடி போலீஸாரை மிரட்டுவார் என்று அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் உஷா தரப்போ அதெல்லாம் பொய் என்று மறுக்கின்றனர்.
மது விற்பனை செய்தவரைப் பிடிக்கச் சென்ற இடத்தில் போலீஸாரை மிரட்ட தீக்குளித்த பெண், சிகிச்சை பெற்றுவருகிறார். சென்னையில் நடந்த இந்தச் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.