துணை கலெக்டர்; எம்.பி வாகன பாஸ் – போலீஸாரிடம் பந்தாக்காட்டிய பல் டாக்டர் சிக்கிய பின்னணி

சென்னை துரைப்பாக்கம் பல்லாவரம் ரேடியல் 200 அடி சாலையில் சொகுசு காரில் பந்தாவாக வந்த இளைஞரின் மோசடி வேலை அவர் அளித்த பதிலால் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் தற்காலிக வாகனச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீஸார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 11-ம் தேதி பள்ளிக்கரணை போலீஸார், துரைப்பாக்கம் பல்லாவரம் ரேடியல் 200 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துரைப்பாக்கத்திலிருந்து பல்லாவரம் நோக்கி வெள்ளை நிற சொகுசு கார் வேகமாக வந்தது. அந்தக் காரை போலீஸார் மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது காரை ஓட்டி வந்த இளைஞர், போலீஸாரைப் பார்த்து தென்சென்னை தி.மு.க எம்.பியின் உறவினர் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, காரின் முன்பக்க கண்ணாடியில் எம்.பி வாகன பாஸ் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டிருப்பதை பார்த்தப்பிறகும் காரை நிறுத்துகிறீர்களா எனக மிரட்டும் தொனியில் பேசினார். அதனால் போலீஸார் அந்தக் காரை சோதனை செய்யாமல் புறப்பட அனுமதித்தனர். அப்போதுதான் எஸ்.ஐ கதிரவன், காரின் முன்பகுதியிலிருந்த கொடியைப் பார்த்தார். அதில் எமெர்ஜென்ஸி ஆக்ஷன் நெட்வொர்க் டெல்லி, செயலாளர் என எழுதப்பட்டியிருந்தது.

எம்.பி-யின் உறவினர் என்றால் இது என்ன என்று யோசித்தபடியே காரை மீண்டும் நிறுத்தினார். அதனால் ஆத்திரமடைந்த இளைஞர், என்னய்யா என்று ஆத்திரத்தோடு கேட்டார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், சார், நீங்கள் என்ன வேலைப்பார்க்கிறீர்கள் என்று கேட்டதும் நானா, துணை கலெக்டர் என்று கூறியிருக்கிறார். அதனால் போலீஸாருக்கு காரில் வந்த இளைஞர் மீதான சந்தேகம் அதிகமானது.

அதனால் சார் உங்களுடைய ஐடி கார், டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி புக் எல்லாவற்றையும் எடுங்க என்று போலீஸார் கேட்டதும், செல்போனை எடுத்த இளைஞர், யாருக்கோ போனில் டயல் செய்தார். உடனே போலீஸார் அவரிடம் ஐடி கார்டு கொடுங்க என்று கேட்டதும் என்னிடமே ஐடி கார்டு கேட்கிறீர்களா என்று கோப்பட்டார். அதற்கு போலீஸார், சார், நீங்கள் துணை கலெக்டராக கூட இருங்கள், ஐடி கார்டை காண்பித்துவிட்டு செல்லுங்க என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் சொகுசு காரில் வந்த இளைஞர் குறித்த தகவல் இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், காரில் ஓட்டப்பட்டிருந்த எம்.பி வாகன பாஸ் ஸ்டிக்கர் குறித்து மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தார். காரில் வந்த இளைஞர் முடிந்தளவுக்கு போலீஸாரை மிரட்டியப்படி சமாளித்துப்பார்த்தார். ஒருகட்டத்தில் போலீஸாரின் கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்கவில்லை. இந்தச் சமயத்தில் தென்சென்னை தி.மு.க எம். பி தரப்பில் போலீஸார் பேசி ஸ்டிக்கர் குறித்த விவரங்களைக் கேட்டனர். அதற்கு எம்.பி தரப்பில் யாருக்கும் ஸ்டிக்கர் கொடுக்கவில்லை என்று கூறினர்.

கார்
காரில் எம்.பி ஸ்டிக்கர்

இதையடுத்து சொகுசு காரில் வந்த இளைஞரைப் பிடித்த போலீஸார் அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவரின் பெயர் ஷியாம் கண்ணா என்றும் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் அவர் காரில் ஒட்டியிருந்தது போலி எம்.பி வாகன பாஸ் ஸ்டிக்கர் என்றும், துணைக் கலெக்டர் என்று கூறியதும் பொய் எனத் தெரியவந்தது. இதையடுத்து ஷியாம் கண்ணா மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஷியாம் கண்ணா, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராகப் பணியாற்றுவதாக கூறியிருக்கிறார். அதுதொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *