சென்னையில் பைக்கில் வந்த இளைஞரிடம் போலீஸார் விசாரித்தபோது அவரின் கையில் 6 செல்போன்கள் இருந்தன. அதுகுறித்து விசாரித்தபோது அந்த இளைஞர் வைத்திருந்தது திருட்டு செல்போன் எனத் தெரியவந்தது.
சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அயனாவரம் மேடவாக்கம் டேங்க் சாலை சந்திருப்பு அருகே பைக்கில் வந்த நபரை போலீஸார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்தார்.
இதனால் சந்தேகத்தின் பேரில் போலீஸார் அவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 6 செல்பேன்கள் இருந்தது. அதுகுறித்து விசாரித்தபோது அவர் வைத்திருந்தது திருட்டு செல்போன்கள் எனத் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் கலைமணி (வயது24). சென்னை எம்.கே.பி.நகர், சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இவர், அயனாவரம், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர் ஆகிய குதிகளில் செல்போன்கள், பைக்குகள், சைக்கிகள்களைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து கலைமணியை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 செல்போன்கள், 2 பைக்குகள், ஒரு சைக்கிள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கலைமணி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.