தமிழக போலீஸில் சேர விருப்பமா? காலியாக உள்ள சுமார் 11,000 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தமிழக காவல் துறையில் 10,978 காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. துறை வாரியான காலிப்பணியிடங்கள் விவரம் வருமாறு:
காவல் துறை: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) 3784 ( இதில் ஆண்கள் 685, பெண்கள் மற்றும் திருநங்ககைள் 3099), இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6545 (ஆண்கள் மட்டும்), சிறைக் காவலர் மொத்தம் 119 பணியிடங்கள், இதில் ஆண்கள் 112, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 7.
தீயணைப்பாளர் 456 (ஆண்கள் மட்டும்). இது தவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (ஆயுதப்படை 62 பெண்கள்) மற்றும் சிறைத்துறை – 10 (பெண்கள்). இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கும் ஊதிய விகிதம் ரூ.18200-52900 ஆகும்.
கல்வி, வயது தகுதி
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்கிறவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும்.
இல்லையெனில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆண்கள் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 170 செமீ உயரம் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 167 செமீ உயரம் தேவை.
மார்பு அளவு 81 செமீ அளவும், விரிந்த நிலையில் 86 செமீ அளவும் இருக்க வேண்டும். பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்கள் 159 செமீ உயரம் தேவை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 157 செமீ உயரம் இருக்க வேண்டும்.
ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும்.
காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு வரும் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://tnusrbonline.org/ இணையதளம் வாயிலாக வரும் அக்டோபர் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, வயது வரம்பு, உடற்தகுதித் தேர்வு உள்ளிட்ட முழு விவரங்களையும் இந்த இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.