ஏடிஎம் கார்டு மூலம் நூதன மோசடி

சென்னையில் ஏடிஎம் கார்டு மூலம் நூதன மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி ஊழியரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை போரூர், ராமசாமி 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஹரி விஸ்வநாதன் (28). இவரின் வங்கி கணக்கிலிருந்து 31.7.2020-ல் எட்டு முறை 1990 ரூபாய் விதம் 15,920 ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஹரிவிஸ்வநாதன் செல்போனுக்கு வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த ஹரிவிஸ்வநாதன், வங்கிக்குச் சென்று விவரத்தைக் கூறினார். இதையடுத்து வங்கி ஊழியர்கள் ஹரிவிஸ்வநாதனின் வங்கி கணக்கை முடக்கம் செய்தனர்.

அப்போது, ஹரி விஸ்வநாதனிடம் ஏடிஎம் கார்டை வங்கி ஊழியர்கள் கேட்டுள்ளனர். அப்போது அவர், 29.7.2020-ம் தேதி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துவிட்டு கார்டை அங்கு மறந்து விட்டுவிட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 1.8.2020-ல் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஹரிவிஸ்வநாதன், ஏடிஎம் கார்டு தொலைந்து போனதாகவும் அதிலிருந்து யாரோ பணம் எடுத்த விவரத்தையும் கூறி புகாரளித்தார்.

அதன்பேரில் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கை கையில் எடுத்த சைபர் க்ரைம் போலீஸார், ஹரிவிஸ்வநாதனின் வங்கி கணக்கு விவரங்களை ஆய்வு செய்தனர்.

சரவணன்
சரவணன்

அப்போது ஹரிவிஸ்வநாதனின் டெபிட் கார்டிலிருந்து எடுக்கப்பட்ட பணம், சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்ட தகவல் கிடைத்தது.

இதுகுறித்து மதுரவாயல் போலீஸாருக்கு சைபர் க்ரைம் போலீஸார் தகவல் தெரிவித்தனர் .உடனடியாக சரவணனைப் பிடித்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், விசாரித்தார்.

அப்போது சரவணன், ஹரிவிஸ்வநாதனைப் போல இன்னும் சிலரின் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் எடுத்தது தெரியவந்தது.

சரவணன், வங்கி ஒன்றில் 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார். குழந்தைக்கு இருதய கோளாறுக்குப்பிறகு அவர் வங்கி வேலைக்குச் செல்லவில்லை. அதனால் வருமானமின்றி தவித்துள்ளார்.

இந்தச் சமயத்தில்தான் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்ட சரவணன், வைஃபை வசதி மற்றும் பின் நம்பர் இல்லாமல் 2,000 ரூபாய் வரை பாயின்ட் ஆப் சேல்ஸ் இயந்திரத்தில் பணத்தை எடுக்கும் வசதி ஆகியவற்றைக் கொண்டு மோசடி செய்ய திட்டமிட்டார்.

இதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்து சிவக்குமார் என்ற பெயரில் வங்கி கணக்கையும் எஸ்.கே. மோட்டார்ஸ் என்ற பெயரில் போலி நிறுவனத்தையும் சரவணன் தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்துக்கு பாயின்ட் ஆப் சேல்ஸ் என்ற இயந்திரத்தை வங்கியிலிருந்து பெற்றுள்ளார்.

அந்த இயந்திரத்தின் மூலம்தான் தன்னுடைய மோசடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். ஏடிஎம் மையங்களில் மறதி காரணமாக தவற விடப்படும் ஏடிஎம் கார்டுகளை சேகரிக்கும் சரவணன், அந்த ஏடிஎம் கார்டுகளை ஸ்வைப்பிங் இயந்திரங்கள் மூலம் பணத்தை எடுத்துள்ளார்.

ஒரு கார்டுக்கு 2,000 ரூபாய் என ஸ்வைப்பிங் செய்து சரவணன் மோசடி செய்துவந்துள்ளார். இந்த வகையில் கடந்த சில மாதங்களாக அவர், லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. சரவணனிடமிருந்து பாயின்ட் ஆப் சேல்ஸ் மெஷின், 13 ஏடிஎம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *