காட்டுக்குள் ரவுடி – வெடிகுண்டு வீசியதில் காவலர், ரவுடி பலி

ரவுடியைப் பிடிக்கச் சென்ற காவலர் மீது வெடிகுண்டு வீசப்பட்டதில் அவர் உயிரிழந்தார். வெடிகுண்டை வீசிய ரவுடியும் பலியானார்.

கொலை வழக்குகள்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூரை சேர்ந்தவர் துரைமுத்து (வயது 30). இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம், ஏரல், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் பதிவான 2 கொலை வழக்குகள் தொடர்பாக துரைமுத்துவை போலீஸார் தேடி வந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் எஸ்.பி.யாக பதவியேற்ற ஜெயகுமார், ரவுடி துரைமுத்துவை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படையை அமைத்தார்.

காவலர் சுப்பிரமணியன்
காவலர் சுப்பிரமணியன்

வல்லநாடு அருகே மணக்கரையில் துரைமுத்து பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்தப் பகுதிக்கு சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்றனர்.

துரைமுத்துவையும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்போது ரவுடி துரைமுத்து நாட்டு வெடிகுண்டுகளை போலீஸாரை நோக்கி வீசினார்.

இதில் காவலர் சுப்பிரமணியன் (வயது 28) மீது வெடிகுண்டு விழுந்து வெடித்தது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் அதே இடத்தில் உயிரிழந்தார்.

துரைமுத்து

ரவுடி துரைமுத்து மீதும் வெடிகுண்டு பட்டது. இதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை போலீஸார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மாவட்ட எஸ்பி ஜெயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

உயிரிழந்த போலீஸ்காரர் சுப்பிரமணியம் ஏரல் அருகேயுள்ள பண்டாரவிளையை சேர்ந்தவர். இவர் ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

அவருக்கு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் கூறுகையில், “வனத்துறைக்குச் சொந்தமான கட்டடத்துக்குள் ரவுடி கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை தயாரிப்பதாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக இன்று பிற்பகலில் தனிப்படை போலீஸார் சம்பவ இடதுக்குச் சென்றனர்.

ரவுடி துரைமுத்து
ரவுடி துரைமுத்து

போலீஸார், நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்த கும்பலைப் பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடி துரைமுத்து தப்பி ஓடினார். அவர் மீது ஏரல் இரட்டை கொலை வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரவுடி துரைமுத்துவைப் பிடிக்க காவலர் சுப்பிரமணி முயற்சி செய்துள்ளார். அப்போது துரைமுத்து கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் மீது வீசியுள்ளார்.

அதில் ஒரு குண்டு, காவலர் சுப்பிரமணி மீது விழுந்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்து ரவுடி துரைமுத்துவின் கையிலிருந்த மற்றொரு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அவர் காயமடைந்தார்.

உடனே அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவரும் உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவத்தில் 3 பேரை பிடித்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது” என்றார்.

காவலர் சுப்பிரமணி

தென்மண்டல ஐஜி முருகன் கூறுகையில், “காவலர் சுப்பிரமணி, தைரியமாக ரவுடி துரைமுத்துவைப் பின்பக்கமாக பிடித்துள்ளார். அப்போதுதான் ரவுடி துரைமுத்து நாட்டு வெடிகுண்டை அவர் மீது வீசியுள்ளார். அதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ரவுடி துரைமுத்துவின் கையில் இருந்த இன்னொரு வெடிகுண்டு வெடித்ததில் அவரும் காயமடைந்தார். இந்தச் சம்பவத்தில் வனத்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் இவர்கள் எத்தனை நாள்கள் தங்கியிருந்தார்கள் என்று விசாரித்து வருகிறோம்.

மேலும் துரைமுத்துவின் உறவினர் ஒருவர் வனத்துறையில் பணியாற்றுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் யாரைக் கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்தார்கள் என்றும் விசாரணை நடந்துவருகிறது” என்றார்.

காவலர் சுப்பிரமணியின் சடலம் பிரேத பரிசோதனைக்குப்பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அவரின் சடலம் அரசு மரியாதையுடன் நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது.

வல்லநாடு அருகே மணக்கரையில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.
வல்லநாடு அருகே மணக்கரையில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.

அதில் பங்கேற்க தமிழக டிஜிபி திரிபாதி, நாளை தூத்துக்குடி செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோயிலுக்கு

உயிரிழந்த காவலர் சுப்பிரமணியின் சகோதரர் கூறுகையில், “இன்று காலையில்தான் தம்பி கோயிலுக்குச் சென்று வந்தான். அப்போதுதான் அவனுக்கு போன் வந்தது. உடனே பணிக்குச் சென்றான். காவல்துறையிடமிருந்து தம்பிக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறினர்.

நேரில் வந்து பார்த்தபோதுதான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ரவுடிகளைப் பிடிக்கச் செல்லும்போது தம்பிக்கு தற்காப்புக்காக ஆயுதம் கொடுத்திருக்கலாம். அவனின் மனைவி மற்றும் கைக்குழந்தைக்கு யார் பதில் சொல்ல போகிறார்கள்” என்றார் கண்ணீர்மல்க

காவலர் சுப்பிரமணி மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிய ரவுடி துரைமுத்துவின் சகோதரர் ஒருவரும் எஸ்.ஐ ஒருவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக தகவல் உள்ளது.

தென்மாவட்டங்களில் நாட்டு வெடிகுண்டு கலாச்சாரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அவரது குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *