தேர்தல் அலுவலர்கள் வரும் நேரத்தில் 2 முறைக்கு மேல் வீட்டில் இல்லையென்றால் தபாலில் வாக்களிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு கோரி விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான 7,300 பேர் தபாலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தபால் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை பெறும் பணி மார்ச் 26-ம் தேதி தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக வாக்காளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். முதல் நாள் வாக்காளர் வீட்டில் இல்லையென்றால் 7 நாட்கள் கழித்து 2-ம் முறை தேர்தல் அலுவலர்கள் வீட்டுக்கு செல்வார்கள். அப்போதும் வாக்காளர் வீட்டில் இல்லையென்றால் அவர்களது வாக்கு நிராகரிக்கப்படும். அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்றும் வாக்களிக்க முடியாது என்று சென்னை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.