நிதி நெருக்கடியில் உள்ள சென்னை மாநகராட்சி வரி வசூலில் தீவிரம் காட்டி வருகிறது. அம்பத்தூர் மண்டலத்தில் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் இருந்த வணிக நிறுவனங்கள், கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை வரி வசூலில் ஈடுபட்டனர்.
வரி செலுத்த முன்வராத கடைகள், வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளை மின் வாரிய ஊழியர்களின் உதவியுடன் அதிகாரிகள் துண்டித்தனர். இந்த அதிரடி நடவடிக்கையால் வியாழக்கிழமை மட்டும் ரூ.1.4 கோடி வரி வசூலானது.
வரி செலுத்தாதவர்கள் உடனடியாக நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில் சொத்து வரி செலுத்த அவகாசம் வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.