நியூசிலாந்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகம் முழுவதும் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்படுவது பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஐஸ்லாந்து நாட்டில் நாள்தோறும் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் நியூசிலாந்து நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.3 ஆகப் பதிவானது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாக புவியியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பல்வேறு கண்டங்களின் பூகோள தட்டுகள் இடம்பெயர்வதால் ஒன்றோடொன்று மோதி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்க கண்டங்களின் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி வருகின்றன என்று புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.