முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணம் அடைந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி வகித்தார்.
இதன்பிறகு டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் அவர் வசித்து வந்தார்.
கடந்த 10-ம் தேதி வீட்டின் குளியல் அறையில் அவர் வழுக்கி விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அப்போது பிரணாபுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மூளையில் ரத்தம் உறைந்து சிறிய கட்டி ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மூளை கட்டியை அகற்ற கடந்த 10-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கரோனா வைரஸுக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக அவரது உடல்நிலை மோசமானது. சில நாட்களுக்கு முன்பு அவர் கோமா நிலைக்குச் சென்றார்.
வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பிரணாபின் உடல் நலம் குறித்து அவரது மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டர் வாயிலாக அறிவித்து வந்தார்.
அபிஜித் முகர்ஜி இன்று மாலை 5.46 மணிக்கு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “எனது தந்தை பிரணாப் முகர்ஜி காலமாகிவிட்டார் என்பதை கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிவித்தார்.
மாரடைப்பு காரணமாக இன்று மாலை 4.30 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் வெளிநாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரணாபின் சுருக்கமான வரலாறு
மேற்குவங்கத்தின், பிர்பும் மாவட்டம், மிராதி கிராமத்தில் கமதா கின்கர் முகர்ஜி, ராஜலட்சுமி தம்பதியின் மகனாக கடந்த 1935 டிசம்பர் 11-ம் தேதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். அவரது அக்கா அன்னபூர்ணா, தம்பி பியூஷ்.

கடந்த 1969-ம் ஆண்டில் பிரணாப் முகர்ஜி அரசியலில் நுழைந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வலதுகரமாக செயல்பட்டார். அதன்பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ராஜீவ் காந்திக்கும் பிரணாபுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.
தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சற்று தொலைவிலேயே பிரணாபை வைத்திருந்தார்.
பிரதமருக்கான அனைத்து தகுதிகளும் பிரணாபுக்கு இருந்தன.
பல்வேறு அரசியல் நெருக்கடிகளால் அவரது பிரதமர் கனவு, கடைசி வரை நனவாகவில்லை. பிரதமராக வேண்டியவர், கடந்த 2012-ம் ஆண்டில் ஜனாதிபதி ஆனார்.
பதவி காலம் நிறைவடைந்த பிறகு அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கினார். சுமார் 50 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் கோலோச்சிய பிரணாப் முகர்ஜியின் மறைவு நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. அனைத்து இந்திய தூதரகங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சொந்த மாநிலமான மேற்குவங்கத்தில் இறுதிச் சடங்கு நடைபெறாது. டெல்லியில் இன்று முழுஅரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.