சென்னை: ஸ்கேன் எடுக்கச் சென்ற கர்ப்பிணி திடீர் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய குடும்பம்

சென்னை தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கச் சென்ற கர்ப்பிணி திடீரென உயிரிழந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ஆவடி காமராஜர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 28). இவர்  அம்பத்தூர்  தொழிற்பேட்டை தனியார்  நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  இவரின் மனைவி வைஷாலி (வயது 25). இவர் பி.காம் படித்திருக்கிறார். தமிழ்மணிக்கும் வைஷாலிக்கும் கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடந்தது.  தற்போது வைஷாலி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். 

கர்ப்பிணியான வைஷாலியை  திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். கடந்த 6 மாதங்களாக அவர், அந்த மருத்துவமனைக்குச் சென்றுவந்தார்.

இந்தச் சமயத்தில் வைஷாலியை அவரின் அம்மா சரளா மற்றும் தமிழ்மணி ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  அப்போது வைஷாலிக்கு ஸ்கேன் செய்ய வேண்டும் என மருத்துவமனை ஊழியர்கள் கூறினர். அதன்படி வைஷாலியை ஸ்கேன் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். ஸ்கேன் அறையின் வெளியில் சரளாவும் தமிழ்மணியும் காத்திருந்தனர். 

அப்போது ஸ்கேன் அறையிலிருந்து வெளிவந்த டாக்டரும் நர்சும் பதற்றத்துடன் காணப்பட்டனர். அவர்களிடம் என்னவென்று சரளாவும் தமிழ்மணியும் விசாரித்தனர். அப்போது ஸ்கேன் செய்தபோது வைஷாலிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக டாக்டரும் நர்சும் கூறினர். அதைக்கேட்டு சரளாவும் தமிழ்மணியும் அதிர்ச்சியடைந்தனர்.

சிறிது நேரத்தில் வைஷாலி  ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் வைஷாலி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். அதனால் சரளாவும் தமிழ்மணியும் கதறி அழுதனர். பின்னர் வைஷாலியின் மரணத்துக்கு என்ன காரணம் என மருத்துவமனையில் விளக்கம் கேட்டனர். அதற்கு மருத்துவனை தரப்பில் அளித்த விளக்கத்தை வைஷாலியின் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

அதையடுத்து ஆவேசமடைந்த தமிழ்மணி கதறி அழுதபடி, திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு வந்தார். மருத்துவமனையின் கவனக்குறைவால் தன்னுடைய மனைவி வைஷாலி உயிரிழந்து விட்டதாக கூறி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும்  வைஷாலியின்  உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 வைஷாலிக்கும், தமிழ்மணிக்கும் திருமணமாகி ஓராண்டே ஆவதால், திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்துவருகிறது.பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் வைஷாலியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

ஸ்கேன் எடுக்க அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிரச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *