வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா மக்களவையில் கடந்த 17-ம் தேதி நிறைவேற்றப்பட்டன.

இரு மசோதாக்களும் கடந்த 20-ம் தேதி மாநிலங்களவையில் கடும் அமளிக்கு நடுவே நிறைவேற்றப்பட்டது.

இதேபோல மக்களவையில் கடந்த 15-ம் தேதி நிறைவேற்றப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா கடந்த 22-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து 3 வேளாண் மசோதாக்களும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடந்த 18-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 23-ம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் மனு அளிக்கப்பட்டது. அதில், வேளாண் மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

வேளாண் மசோதாக்கள் கார்பரேட் நிறுவனங்களுக்கும் பெரிய விவசாயிகளுக்கும் சாதகமாக உள்ளது. இந்த மசோதாக்களால் குறு, சிறு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் எதிர்காலத்தில் நிறுத்தப்படக்கூடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்து வருகிறது. “குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும். விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளைபொருட்கள் வழக்கம்போல கொள்முதல் செய்யப்படும்.

இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் உறுதி அளித்துள்ளனர்.

ஜனாதிபதி ஒப்புதல்

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் வழங்கினார். இதன்மூலம் 3 மசோதாக்களும் சட்டமாகி உள்ளன.

வேளாண் மசோதாக்கள் விவகாரத்தால் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய சிரோமணி அகாலி தளம் பாஜக கூட்டணியில் இருந்து இன்று அதிகாரபூர்வமாக வெளியேறியது.

சண்டிகரில் இன்று நடைபெற்ற சிரோமணி அகாலிதளம் கூட்டத்தில் பேசிய அந்த கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், “வேளாண் மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராகப் போரிட வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

சிரோமணி அகாலிதளத்தின் அழைப்புக்கு சிவசேனா, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன்படி வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட திட்டமிட்டுள்ளன.

திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த எம்.பி. டெரக் ஓ பிரைன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “விவசாயிகளுக்கு ஆதரவாக அகாலி தளம் செயல்படுகிறது.

அந்த கட்சிக்கு திரிணமூல் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும். வேளாண் சட்டங்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த மசோதாக்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம், பொது விநியோக திட்டத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 25-ம் தேதி பஞ்சாபில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அந்த மாநிலம் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அமிர்தசரஸ்-டெல்லி ரயில் தடத்தில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தோடு சேர்ந்து தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்து வருகிறது.

மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக உள்ளன. மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என்று கேரள அரசு வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *