தனியார் பள்ளிகள் 40% கட்டணத்தை மட்டுமே வசூலிக்கலாம் – உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் பள்ளிகள் 40 சதவீத கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே தனியார் பள்ளி நிர்வாகங்கள், கல்வி கட்டண வசூலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
கொரோனாவால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர், சம்பள குறைப்பை எதிர்கொண்டுள்ளனர். இதன்காரணமாக பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.


இந்த விவகாரம் தொடர்பாக தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


தனியார் பள்ளிகள் சார்பில் 80 சதவீத கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. இப்போதைக்கு கல்வி கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தொண்டு நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.


இந்நிலையில் தமிழக அரசு தனது விளக்கத்தை உயர் நீதிமன்றத்தில் இன்று பதிவு செய்தது. “தனியார் பள்ளிகள் 75 சதவீத கல்வி கட்டணத்தை வசூல் செய்து கொள்ளலாம். இதை 3 தவணைகளாக பெற்றோர் செலுத்த தனியார் பள்ளிகள் அனுமதிக்க வேண்டும். பள்ளிகள் திறந்த பிறகு மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தை வசூல் செய்யலாம். பள்ளி கட்டண நிர்ணய குழு புதிய கட்டண விகிதங்களை நிர்ணயம் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது” என்று தமிழக அரசு தெரிவித்தது.

இறுதியில் உயர் நீதிமன்றம் இன்று மாலை பிறப்பித்த உத்தரவில், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தில் 40 சதவீதத்தை மட்டும் வசூல் செய்து கொள்ளலாம். 2 மாதங்களுக்குப் பிறகு 35 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரக்கூடாது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு பொருந்தும்” என்று தெரவிக்கப்பட்டது.


வழக்கின் அடுத்த விசாரணை வரும் அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *