மீதமுள்ள 35% கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த ஐகோர்ட், lனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதில் 40 சதவீதத்தை செப். 30-ம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க மீதமுள்ள கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகள் தரப்பில் முறையிடப்பட்டது.
மீதமுள்ள 35% கல்வி கட்டணத்தை வரும் 2021 பிப்ரவரிக்குள் தனியார் பள்ளிகள் வசூலித்துக் கொள்ளலாம். இதனை தவணை முறையில் வசூலிப்பது தொடர்பாக பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
முழு கட்டணத்தை வசூலித்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிரான புகார் குறித்து நவ. 27-க்குள் அறிக்கை அளிக்க வேண்டும். இல்லையெனில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 1ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.