தனியார் ஊழியர்களும் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது முதல் சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கப்படவில்லை. சென்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டது. எனினும் ரயில்வே வாரியம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
தற்போது ரயில்வே ஊழியர் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களும் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
“தனியார் நிறுவனங்களின் சுகாதாரம், துப்புரவு பணியாளர்கள், அத்தியாவசிய பொருட்களை கையாளும் தனியார் ஊழியர்கள், அனைத்து கல்வி நிலையங்களில் பணியாற்றுவோர், தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து ஊழியர்கள், குழந்தை நலம், மூத்த குடிமக்கள் நலம், சுகாதாரம், கல்வி சேவைகளில் ஈடுபடும் சமூக சேவை செய்யும் அமைப்புகள், அச்சு ஊடகம், காட்சி ஊடக ஊழியர்கள், பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள வழக்கறிஞர்கள் சிறப்பு ரயில்களில் பயணம் செய்யலாம்.
தனியார் ஊழியர்கள் தங்களது அலுவலக புகைப்பட அடையாள அட்டை, அலுவலகத்தில் இருந்து எழுத்துபூர்வமாக பெறப்பட்ட அனுமதி கடிதத்தை வைத்திருக்க வேண்டும்” என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.