பப்ஜி விளையாட்டுக்கு தடை ஏன்?

பப்ஜி விளையாட்டுக்கு தடை ஏன்? என்பது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர்.

அவர்களை இந்திய வீரர்கள் விரட்டி அடித்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழக ராணுவ வீரர் பழனி உட்பட 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததை இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் உறுதி செய்தன. அப்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்தது.

டிக் டாக் செயலிக்கு தடை

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு கடந்த ஜூன் 29-ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது.

இதில் சில சீன செயலிகள் வேறு பெயர்களில் புதிதாக முளைத்தன. இதைத் தொடர்ந்து டிக் டாக் லைட் உள்ளிட்ட மேலும் 47 சீன செயலிகளுக்கு கடந்த ஜூலை இறுதியில் மத்திய அரசு தடை விதித்தது.

போர் பதற்றம் தணிந்திருந்த நிலையில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் லடாக்கின் பான்காங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சி செய்தனர்.

இந்த ஊடுருவலை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து சீன வீரர்களை ஓட, ஓட விரட்டியடித்தனர். இதன்காரணமாக இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் பப்ஜி விளையாட்டு மற்றும் 117 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது. பப்ஜி மட்டுமன்றி கட்கட், பைடு, பேஸ்-யூ, வீ சாட் வொர்க், லைப் அப்டர், சைபர் ஹன்டர், சைபர் ஹன்டர் லைட், வோர் பாத், கேம் ஆப் சுல்தான்ஸ், அப் லாக், அப் லாக் லைட், மியூசிக் -எம்பி3 பிளையர், மியூசிக் பிளேயர்- ஆடியோ பிளேயர், கிளீனர் – போன் பூஸ்டர், பென்குயின் எப்எம், விபிஎன் பார் டிக் டாக், ஐபிக், சோல் ஹன்டர்ஸ் உள்ளிட்ட செயலிகள் தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மத்திய அரசு விளக்கம்

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆண்ட்ராய்டு, ஐபோன் செல்போன் தளங்களில் ஏராளமான செயலிகள், இந்தியர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி திருடுகின்றனர்.

அத்தகைய செயலிகளை முடக்க வேண்டும் என்று இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம், மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தன.

அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் குறிப்பிட்ட செயலிகள், பயனர்களின் தகவல்களை திருடுவது உறுதி செய்யப்பட்டது.

இந்த செயலிகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

எனவே தகவல் தொழில்நுட்ப சட்டம் 69ஏ-ன் கீழ், பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 கோடி பேர் பதிவிறக்கம்

இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் பப்ஜி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கின்போது கோடிக்கணக்கானோர் பப்ஜி விளையாடி கொண்டிருந்தனர். தற்போதைய நிலையில் சுமார் 3.3 கோடி பேர் தொடர்ந்து பப்ஜி விளையாடி வருகின்றனர்.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி வருவதாக பரவலாக புகார்கள் எழுந்தன. பப்ஜி தொடர்பாக நாடு முழுவதும் காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இளம் தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வரும் பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேசிய அளவில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. மக்களின் கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது.

பப்ஜிக்கு தடை ஏன்?

தென்கொரியாவை சேர்ந்த புளுஹோல் என்ற நிறுவனம் பப்ஜி செயலியை நிர்வகிக்கிறது. புளுஹோல் பங்குகளில், சீனாவை சேர்ந்த டென்சென்ட் ஹோல்டிங்ஸ் கணிசமான பங்குகளை வைத்துள்ளது.

பப்ஜி விளையாட்டை உருவாக்கியது டென்சென்ட் ஹோல்டிங்ஸின் கிளை நிறுவனமான டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் ஆகும். அந்த வகையில் பப்ஜி செயலி, சீன செயலி என்றே அடையாளம் காணப்படுகிறது.

இதன்காரணமாகவே பப்ஜி செயலிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *