இந்திய விமானப் படைக்காக பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் முதல்கட்டமாக 5 போர் விமானங்கள், பிரான்ஸுக்கான இந்திய தூதரிடம் இன்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.
இந்த போர் விமானங்களை இந்திய விமானிகள் ஓட்டி வருகின்றனர். இந்தியாவின் நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் ரபேல் போர் விமானங்கள் நாளை தரையிறங்குகின்றன. அங்கு விமானிகள் சிறிது ஓய்வெடுப்பார்கள்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை மறுநாள் அதிகாலையில் ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு 5 போர் விமானங்களும் வந்து சேருகின்றன.
15.27 மீட்டர் நீளம், 10.8 மீட்டர் இறக்கை அகலம் கொண்ட ரபேல் போர் விமானங்கள் மணிக்கு 2,222 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயக்கூடியவை. சுமார் 50 ஆயிரம் அடி உயரத்துக்கு மேலே எழும்பக் கூடியவை. சுமார் 24,500 கிலோ எடை கொண்ட ஆயுதங்களை சுமந்து செல்லும். குறிப்பாக அணு குண்டுகளை வீசும் திறன் கொண்டவை.

எதிரிகளின் போர் விமானங்கள், எதிரிகளின் தரை, கடல், வான் இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும். நடுவானிலேயே ரபேல் போர் விமானங்களுக்கு எரிபொருளை நிரப்ப முடியும்.
இந்த போர் விமானத்தில் பொருத்துவதற்காக பிரான்ஸிடமிருந்து ஹம்மர் ஏவுகணைகளை இந்தியா வாங்குகிறது.
இவை எதிரிகளின் கான்கிரீட் பதுங்கு குழிகளை தகர்த்து தூள்தூளாக்கும்.சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக ரபேல் போர் விமானங்கள் வெறித்தனமாக வந்து கொண்டிருக்கின்றன.