ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் இணைந்தன

இந்திய விமானப் படையில் ரபேல் போர் விமானங்கள் நேற்று அதிகாரபூர்வமாக இணைந்தன

பிரான்ஸிடம் இருந்து ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதில் முதல்கட்டமாக 10 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் சில மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டன.

இதில் 5 போர் விமானங்கள் பிரான்ஸிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த போர் விமானங்கள் மூலம் இந்திய விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 5 ரபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தடைந்தன.

அம்பாலா விமானப்படை தளம்

ஹரியாணாவின் அம்பாலா விமானப் படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 ரஃபேல் போர் விமானங்களும் நேற்று அந்த விமானப் படைத் தளத்தின் ‘கோல்டன் அரோஸ்’ படைப்பிரிவில் இணைக்கப்பட்டன.

அம்பாலா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக பாரம்பரிய சர்வ தர்ம பூஜை நடத்தப்பட்டு, வாட்டர் சல்யூட் எனப்படும் தண்ணீரை பீய்ச்சி அடித்து ரஃபேல் போர் விமானங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரபேல் போர் விமானம்.
ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரபேல் போர் விமானம்.

இதன்பின் ரஃபேல் போர் விமானங்கள் வானில் பல்வேறு சாகசங்களை செய்தன. இதைத் தொடர்ந்து தேஜாஸ் போர் விமானங்களும் சராங் ஹெலிகாப்டர்களும் வானில் சாகசங்களை நிகழ்த்தின.

ராஜ்நாத் சிங் ஆவேசம்

விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே ஆழமான நட்பு நீடிக்கிறது. வரும் காலத்தில் இருநாடுகளின் உறவு மேலும் வலுவடையும்.

இந்திய விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும். 

எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் ரஃபேல் போர் விமானங்களின் வருகை முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. இந்தியாவின் மீது கண் வைப்போருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

எல்லையில் அசாதாரண சூழ்நிலை உருவாகும்போதெல்லாம் இந்திய விமானப் படை சமயோகிதமாக செயல்பட்டு தனது திறமையை நிரூபிக்கிறது.

விமானப் படை வீரர்கள்  அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகின்றனர். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விமானப்படை திகழ்கிறது.

பாதுகாப்புக்கு முதலிடம்

அண்மையில் மாஸ்கோவுக்கு சென்றிருந்தபோது இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தேன்.

எல்லைப் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது.

அதேநேரம் இந்திய மண்ணை ஆக்கிரமிக்க முயற்சித்தால் அதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை. அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை பாதுகாப்புக்கு முதலிடம் கொடுக்கப்படும்.

தற்போது எல்லையில் எழுந்துள்ள பிரச்சினையில் மட்டுமல்ல, எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிப்போரையும் நாம் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.    

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

சீனா மற்றும் பாகிஸ்தானின் பெயர்களைக் குறிப்பிடாமல் அந்த நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.

பிரான்ஸ் அமைச்சர் வாக்குறுதி

பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி பேசும்போது, “ரஃபேல் போர் விமானங்களால் இந்தியாவின் ராணுவ வலிமை அதிகரித்திருக்கிறது.’இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு பிரான்ஸ் முழு ஆதரவு அளிக்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தரம் இடம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரான்ஸ் முழு ஆதரவு அளிக்கும். இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரான்ஸ் எப்போதும் துணை நிற்கும்” என்று உறுதி அளித்தார்.

அம்பாலா விமானப்படைத் தளத்தின் கோல்டன் அரோஸ் படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள 5 ரஃபேல் போர் விமானங்களும் லடாக், காஷ்மீர் எல்லையில் பிரச்சினை எழுந்தால் களமிறக்கப்படும். 

இரண்டாம் கட்டமாக வரும் நவம்பரில் மேலும் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

இந்த போர் விமானங்கள் மேற்குவங்கத்தின்  ஹசிமரா விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்படும். இதன்மூலம் வடகிழக்கு எல்லை வான் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்.

வரும் 2021 இறுதிக்குள் அனைத்து ரஃபேல் போர் விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.

அப்போது இந்தியாவின் ராணுவ வலிமை பன்மடங்கு அதிகரித்துவிடும். சீனாவின் அதிநவீன ஜே-20 மற்றும் பாகிஸ்தானின் எப்.16 ரக போர் விமானங்களைவிட ரஃபேல் போர் விமானங்கள் வலிமை வாய்ந்தவை என்று சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *