காற்றாலை மூலம் தண்ணீர் எடுக்க முடியுமா?

காற்றாலை மூலம் தண்ணீர் எடுக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய ஆலோசனையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

டென்மார்க் நாட்டை சேர்ந்த ‘வெஸ்டாஸ்’ காற்றாலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹென்ரிக் ஆண்டர்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 6-ம் தேதி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது காற்றாலைகள் மூலம் மின்சாரம் மட்டுமன்றி, சுத்தமான ஆக்ஸிஜன், சுத்தமான குடிநீர் எடுப்பது குறித்தும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி யோசனை கூறினார்.

இதற்கு பதில் அளித்த ஹென்ரிக், இந்திய பிரதமர் “புதிய சிந்தனைகளின் ஊற்று” என்று புகழாரம் சூட்டினார்.

பிரதமர் மோடியின் இந்த வீடியோ பதிவை ராகுல் காந்தி தனது 

ட்டவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு எதிர்மறையாக விமர்சனம் செய்துள்ளார். 

அதில், “நமது பிரதமருக்கு புரியவில்லை என்பது பிரச்சினை கிடையாது. ஆனால் அவருக்கு புரியும்படி எடுத்துச் சொல்ல அவரை சுற்றியுள்ள யாருக்குமே துணிச்சல் இல்லை. இதுதான் இந்தியா எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆபத்து” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல் காந்திக்கு எதுவுமே புரியவில்லை என்பதை எடுத்துச் சொல்ல அவரை சுற்றியுள்ள யாருக்குமே துணிச்சல் இல்லை. 

உலகின் முன்னணி காற்றாலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியே பிரதமர் மோடியின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் ராகுல் காந்தி பிரதமரை கிண்டல் செய்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “அறியாமையும் ஒருவகையில் ஆனந்தம் என்று கூறுவார்கள். ஆனால் இந்திய அரசியலில் தன்னுடைய அறியாமையை ராகுல் காந்தி தொடர்ந்து நிரூபித்து கொண்டே இருக்கிறார். 

இது காங்கிரஸுக்கு மிகப்பெரிய ஆபத்து. இதை இளவரசருக்கு உணர்த்த யாருக்குமே தைரியம் இல்லை” என்று கூறியுள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது, “காற்றாலைகளில் இருந்து சுத்தமான குடிநீர் எடுக்கும் ஆராய்ச்சி தொடர்பான இரண்டு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை இணைத்துள்ளேன். 

இதை ராகுல் காந்தி படிக்க வேண்டும். செயல்படாத மந்த மனநிலையில் இருக்கும்  அவரால் ஆய்வுக் கட்டுரைகளை படித்து புரிந்து கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *