ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தம் 200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. காங்கிரஸுக்கு 107 உறுப்பினர்கள் இருந்தனர்.
சச்சின் பைலட் அவரது ஆதரவாளர்கள் என 19 எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு எதிராக திரும்பியுள்ளனர். அவர்களின் பின்னணியில் பாஜக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 88 ஆகக் குறைந்துள்ளது. 10 சுயேச்சை எம்எல்ஏக்கள், சில சிறிய கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கின்றன. அந்த வகையில் காங்கிரஸ் அரசுக்கு 102 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
சச்சின் பைலட் அணியை சேர்ந்த 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ராஜஸ்தான் சட்டப்பேரவை தலைவர் ஜோஷி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை எதிர்த்து சச்சின் பைலட் சார்பில் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே முதல்வர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனவே சட்டப்பேரவை விரைவில் கூட்டப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் காங்கிரஸ் அரசு தப்பி பிழைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.