ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டில் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இரு மாநிலங்களிலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்த கமல்நாத்துக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல் நீடித்தது. கடந்த மார்ச் மாதம் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் பாஜகவில் ஐக்கியமாகினர். இதன்காரணமாக காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது.
இதேபோன்ற சூழ்நிலை ராஜஸ்தானிலும் ஏற்பட்டுள்ளது.
சச்சின் பைலட்
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றனர்.
சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 25 பேருடன் டெல்லி அருகேயுல்ள உள்ள ஓட்டலில் தங்கியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று அவர் சந்திப்பார் என்று தெரிகிறது. ஜோதிர்ராதித்ய சிந்தியா போல சச்சின் பைலட்டும் போர்க்கொடி உயர்த்தினால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி அளித்து இழுக்க பாஜக முயற்சி செய்வதாக முதல்வர் அசோக் கெலாட் நேற்று குற்றம் சாட்டினார். இந்த சூழ்நிலையில் சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டிருப்பது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 200 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகள், சுயேச்சைகள் என அரசுக்கு 124 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. பாஜகவில் 72 எம்எல்ஏக்கள் உள்ளனர். சச்சின் பைலட் அணி மாறினால் ராஜஸ்தானில் காட்சிகள் மாறும்.